பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

119

“அப்டில்லாம் யாரையும் மனம் நோக பேசாதம்மா. நான் மெட்ராசுக்குப் போறேன். இங்கே இதுக்கு மேலயும் நான் இருந்தால், நல்லதுக்குப் பதிலாய் கெட்டதுதான் நடக்கும். அண்ணனுடைய கல்யாணம் நின்னுடப் படாதுன்னு, நான் ஒரேயடியாய் போறேம்மா. அதனால நீ பெற்ற குழந்தை ... ஒன் மடியில புரண்ட நான் போறேம்மா. கலாவதியை திட்டாதம்மா. அண்ணன் கல்யாணத்தை முடிச்சுடும்மா. அப்பாவை நல்லா பார்த்துக்கம்மா. அப்புறம்...”

தமிழரசியால் பேச்சைத் தொடர முடியவில்லை. அந்த பேச்சுத் தொடர்ச்சிக்கு விம்மல்கள், ‘கமாக்களாயின’, கேவல் ஒலிகள் ஆச்சரியக் குறிகளாயின. இறுதியில் அழுகை அதற்கு முற்றுப்புள்ளியாகியது. பேசிய வாய்க்கு அம்மாவின் தோள் அடைக்கலமாகியது.

குழந்தையாய் கேவிய மகளைக் கட்டியணைத்து, உச்சி மோர்ந்து தாய்க்காரி, சக்திக்கு மீறிய குரலில் அழுதாள். பிறகு மகளின் முகத்தை நிமிர்த்தி “நீ எதுக்கம்மா போகணும்? அண்ணனுக்கு நல்லது செய்யுறதாய் நெனைச்சு, நீ போகாண்டாம்மா. அதோ பாரு, அண்ணன் கூட அழுகிறான் பாரு” என்றாள்.

தமிழரசி அண்ணனை, ஆசை மிஞ்சப் பார்த்தபோது, அவனே “நான்... யாரும் போகப்படாதுன்னு அழல.” என்று சொல்லியபடியே அழுதான். ஒரு வேளை, தமிழரசியை, சென்னைக்குக் கொடுத்து, விஜயாவை வீட்டிற்குள் வாங்கிக் கொள்ளலாம் என்ற நினைப்போ... என்னவோ.

அப்பட்டமான சுயநலம், அண்ணனின் முகத்தில் ரேகைகளாய், சுழிப்புக்களால் தோன்றியிருப்பதைக் கண்ட தமிழரசி, அம்மாவை பலவந்தமாக உதறியபடி எழுந்தாள். கீழே கிடந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு, தந்தையைப் பார்த்தாள்.