பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

நெருப்புத் தடயங்கள்

அவரோ, சிறிது நேரம் பேச்சற்றுப் போனார். மகளை தற்செயலாய் பார்த்த கண்களை விலக்கி, அவற்றை மனைவி மீது வீசியபடியே இவளை கண்டபடி திட்டுனாலாவது, முத்துலிங்கம் மனசு மாறுமுன்னு நினைச்சேன். அவனும் ஒரேயடியாய் குதிக்கான்” என்றார்.

தமிழரசி புரிந்து கொண்டாள். தந்தை, மறைமுகமாக தன்னிடம் வருத்தம் தெரிவிப்பதைக் கண்டு கொண்டாள். அவள் மனம், உடம்புள் அனல் காற்றை வீசியது. கல்லூரிக்கு வெளியேயும் உள்ளேயும் தன்னை தவம் செய்வது போல் காத்துக் கிடந்து பார்த்துக் களித்த தந்தையை, மனம் பொங்க, கண் பொங்கப் பார்த்தாள். பிரியப்பட்டவளைக் கூட, தன் அனுமதியுடன் கை பிடிக்க நினைத்த அண்ணனை மருவி மருவிப் பார்த்தாள்.

ஒரு வேளை, அவரோ அவனோ ‘ஏன் போறே’ என்று கேட்டிருந்தால் தமிழரசி, தோற்றிருக்கலாம். பகவதியம்மாதான், “அவளை போகாண்டாமுன்னு சொல்லுங்க... சொல்லுங்க” என்று சொன்னபடியே எழுந்தாள்.

தமிழரசி, தன்னிடம் தானே தோற்க விரும்பாதது போல், வாசலை நோக்கி நடந்தாள். அப்பா, போகாண்டாம் என்று சொல்வதற்கு முன்பே புறப்பட்டாக வேண்டும் என்று எண்ணி, வாசலுக்கு வந்தவள், அங்கிருந்தபடி, அண்ணனை ஒரு தடவையும், அப்பாவை இரு தடவையும், அம்மாவைப் பல தடவையும் பார்த்துக் கொண்டாள்.

“ஒரு தடவையாவது என் கையால சாப்பிட்டுட்டுப் போம்மா. நீ திரும்பி வரும்போது, நான் இருக்கேனே இல்லியோ” என்று அம்மா அழுதபோது தமிழரசி, வீட்டிற்கு வெளியே ஒடி வந்தாள். அம்மா, பாசக் கயிற்றால் கட்டிப் போட்டு விடுவாள் என்ற பயம். கடவுளே... கடவுளே... அம்மா சொல்வது மாதிரி, இது தான் அவளை நான் பார்க்கும் கடைசித் தடவையோ?