பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

121

அம்மாவுக்கு எதுவும் ஆயிடுமோ? ஆகாது. அண்ணன் இருக்கான், அப்பா இருக்கார். நான் தான் இருக்கப்படாது

தெருவில் நின்றபடி, தன் வீட்டையே வெறித்துப் பார்த்த தமிழரசி, சித்தப்பா வீட்டிற்குள் நுழைந்தாள். மாடக்கண்ணு, லத்திக் காய முத்திரைகளுடன், அசந்து தூங்கிக் கொண்டிருந்தாலும், இன்னமும் ரத்தம் உலராத அந்தக் காயங்களைக் கடித்த கொசுக்களையும், ஈக்களையும் தூங்கியபடியே கைகளால் அவ்வப்போது துரத்தினார். உடம்பை நெளித்தார்.

அதைப் பார்க்கப் பார்க்க தமிழரசிக்கு மீண்டும் ரத்தம் கொதித்தது. பெற்றோர் மீதும், தனக்கு முன்னால் பிறந்தவன் மீதும் மீண்டும் வெறுப்பேற்பட்டது. வீட்டிற்குள், மகளின் பிரிவுத்துயரைக் கண்ணீரால் கழுவிக் கரைப்பது போல் சத்தம் போட்டு அழும் அம்மா, அப்போது அவளுக்கு ஒரு பழிகாரியாகத் தோன்றினாள்.

இளமைக் காலத்தில், தன்னை ஒரு தோளிலும், கலாவதியை இன்னொரு தோளிலும் சுமந்தபடி, ராமலட்சுமணரைச் சுமந்த அனுமான் போல, தங்களை கோவில் குளங்களுக்குக் கொண்டு சென்ற அந்த ‘பைத்தியார’த் தர்மரையே பார்த்தபடி நின்றாள். பிறகு, அவர் கால் மாட்டில் பதினைந்து பத்து ரூபாய் நோட்டுக்களை வைத்து விட்டு, நிமிர்ந்தபோது, அடுப்பங்கரையில் முடங்கிக் கிடந்த கலாவதி, அவளையே பார்த்தபடி இருந்தாள். தமிழரசிக்கு, மனம் வியர்த்தது. குரல் கனத்தது. கண் பனித்தது. அவளைப் பார்க்காமல், ஆகாயத்தைக் காட்டிய கூரை மேட்டையே பார்த்தபடி பேசினாள்.

“நான் இப்பவே மெட்ராஸ் போறேன் கலா, இந்தச் சமயத்துல நான் இங்கே இருக்கது நல்லதல்ல. அப்பாவை ஜாக்கிரதையாய் பார்த்துக்கோ. எனக்கு அடிக்கடி லட்டர் போடு. வினை தீர்த்தானையும், பொன்மணியையும் தேடிப்-