பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

நெருப்புத் தடயங்கள்


பிடிச்சு, இங்கே அனுப்பி வைக்கேன், ரூபாய்... அதோ வச்சிருக்கேன். அப்பாவும் நீயும் டாக்டர் கிட்டே காயத்தைக் காட்டுங்க. ஒரு வேளை ஊமைக் காயம் இருக்கலாம். அது ரத்தக் காயத்தைவிட... உயிர்ல முடிக்கிற காயம்... ஏன் கலா பேச மாட்டக்கே?"

கலாவதி, கண்ணீர் விட்டாள். காயத்தை ஆற்றிவிடலாம். ஆனால் ஊர் கண் முன்னால் அடிபட்ட மானத்தை எப்படி ஆற்றுவது என்று கேட்க நினைத்தாளோ? இந்த நிலையில், எங்களை நிர்க்கதியாய் விட்டுட்டுப் போவது நியாயமான்னு சொல்ல நினைத்தாளோ? ஒரு வேளை, எதுவும் கேட்கத் தோன்றாததால் தான் கண்ணீர் சிந்துகிறாளோ?

தமிழரசி, கலாவதியை தூக்கி நிறுத்தினாள். அவள், தலையைக் கோதியபடி பரிவோடு பேசினாள்.

"ஏண்டி கலங்குறே? என் உடம்பு எங்கே இருந்தாலும், என் மனம் இந்த ஊர்ல தான் சுத்திக்கிட்டு இருக்கும். வடக்குத் தெருவுல இல்லை... அதோ அழுகிறாளே... அந்த வீட்ல இல்லே... இந்த வீட்லயே சுற்றும்... நான் இருக்கேன்... பயப்படாதே... ஏண்டி இன்னும் அழுவுறே? 'போயிட்டு வா தமிழு'ன்னு ஒரு வார்த்தை சொல்லேண்டி. ஒனக்குக் கூடவா என் மனசு புரியல?"

கலாவதி, தமிழரசியை இறுகக் கட்டினாள். உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டால், அடிபட்ட பகுதியில் வலியெடுக்காமல், அது வெள்ளை வெளேரென்று தோன்றி, அதில் இடியுடன் கூடிய மழைபோல், வலியுடன் கூடிய செம்மழை பீறிடுவதுபோல், முதலில் பேதலித்து நின்ற கலாவதி, தமிழரசியை அழுந்தப் பிடித்தபடி ஒரேயடியாய் அரற்றினாள்.

"எங்களைப் பிடிச்ச கெட்ட காலம், ஒன்னையும் பிடிச்சுட்டே தமிளு. நாங்க அடிபட்டதுகூட பெரிசில்ல. நீயும் ஒன் வாழ்க்கையில அடிபட்டு, ஊமைக்கரயத்துல தவிச்சதைப் பார்க்க என்னால தாங்கமுடியலியே தமிளு.