பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

123


இந்த ஊரு, நீ இருக்கதுக்கு தகுதியில்லாத ஊரு. போம்மா. நீ எங்கெல்லாம் போறீயோ, அங்கெல்லாம் இந்த கலாவதியோட உயிரு சுத்தும். எய்யா...எய்யா... நம்ம ராசாத்தி மெட்ராசுக்கு போறாள், எழுந்திரும்."

"அப்பாவை எழுப்பாதடி, அவரைப் பார்த்துட்டு என்னால போக முடியாது. நான் வரட்டுமா? நீ கூட வரப்படாது வழியனுப்ப. வாசலுக்குக்கூட வராண்டாம். இல்லன்னா, அதோ, அங்கே ஒப்பாரி வைக்கிற எங்கம்மா... நீதான் என்னைக் கடத்திட்டேன்னு பழி போடுவாள். வினை தீர்த்தானை தேடிப் பிடிச்சு அனுப்பி வைக்கேன்."

"அந்த நொறுங்குவான் எக்கேடாவது கெடட்டும். ஊர்ல எல்லாம் ஆடி அடங்குனதும், நீ இங்கே வந்து, ஒரு தடவையாவது மொகத்தைக் காட்டிட்டுப் போ."

தமிழரசி, கலாவதியிடம் இருந்து விடுபட்டு, சித்தப்பாவைப் பார்த்தாள்; அவர் காயங்களில் மொய்த்த ஈக்களை, தன் முந்தானையால் வீசினாள். அதைச் செய்யும்படி, கலாவதிக்கு கண்களால் ஆணையிட்டு விட்டு, ஸ்தம்பித்து நின்றாள். பிறகு, மடமடவென்று வீதிக்கு வந்து, விதி காட்டிய வழியில் நடப்பவள் போல் நடந்தாள்.

ஊர் கிணற்றில், தோண்டிப் பட்டைகளில், தண்ணீர் மொண்டு கொண்டிருந்த பெண்கள் நீரை ஊற்றாமல், தமிழரசியையே பார்த்தார்கள். ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த உள்ளூர் பெரிய மனிதர்கள், அவளை ஏளனமாகப் பார்ப்பது போலிருந்தது. அவர்களைக் கடந்து, சற்று நகர்ந்தபோது "பொன்மணிய கடத்துனதே இவள் தான், இப்போ அவங்களை ஒளிச்சு வச்சுருக்கிற இடத்துக்குப் போகிறாளாக்கும்”"என்று சொல்வது காதில் விழுந்தது.

தமிழரசி, உதடுகளை வெறுமையாய் கடித்தபடி, வெறித்துப் பார்த்தபடி தன் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தாள்.