பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

நெருப்புத் தடயங்கள்


முன்பெல்லாம் இப்படி சென்னைக்குப் புறப்படும்போது பெற்றோர், ராஜதுரை, வினை தீர்த்தான், கலாவதி முதல் முத்து மாரிப் பாட்டிவரை ஊரில் கால்வாசிப்பேர் அவள் பின்னால் நடப்பார்கள்.

அவள், டீக்கடைப் பக்கம்' வந்தபோது "நான் சொல்றத இப்பவாவது நம்புங்கப்பா, இதெல்லாம் 'நான் அடிக்கிறது மாதிரி அடிக்கிறேன்...நீ அழுகுறது மாதிரி' என்கிற நாடகம். இல்லன்னா, இவள் ஏன் இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போகணும்? கடைசில மாட்டிக்கிட்டது அந்த அப்பாவிப் பயல் வினை தீர்த்தான் தான். ஏல மண்டையா! சொல்றது மண்டையில உறைக்குதாடா?" என்று 'கில்லாடியார்' கேட்பதும், "செறுக்கிமவனுக்கு நல்லா வேணும். என்னை எப்டில்லாம் அடிச்சான்" என்று 'மண்டையன்' சொல்வதும், அவனுக்குக் கேட்டது.

தமிழரசி, தன்னை நிமிர்த்திக் கொண்டாள். நல்லதைச் செய்து விட்டு, 'அல்லதை' வாங்கிக் கொண்ட கம்பீரத்துடன், தன்னைப் புரிந்து கொள்ளாத ஊரைத் தான் புரிந்து கொண்ட தெளிவோடு பெருமிதமாய் நடந்தாள். வாய் வம்பர்களைப் புழுவாய் நோக்கி, தன்னை புனிதம்போல் நோக்கிய ஆசாரிப் பெண்களையும், அப்பாவிக் குயவர்களையும் சோகமாய் பார்த்தபடியே, சுதேசியாய் நடந்தாள்.

ஊரைத் தாண்டி, பனந்தோப்புப் பக்கம் நடந்தபோது பழக்கப்பட்ட உருவம் ஒன்று, கையில் கற்களோடும், வாயில் சொற்களோடும், பனைமரங்களுக்குள் சுற்றிச்சுற்றி வருவதைப் பார்த்தாள்! முத்துமாரிப் பாட்டி!

தமிழரசி, பனந்தோப்பிற்குள் பாட்டியைப் பார்த்து ஓடினாள். "பாட்டி... பாட்டி" என்று பதறியபடியே ஓடி, முத்துமாரிப் பாட்டியின் கைகளைத் திருகி, கற்களைக் கீழே போட்டாள். ஆனால் தலைமுடியும், சேலையும் அலங்கோல மாய்த் தோன்ற, திரிசூலி போல் தோன்றிய முத்துமாரிப் பாட்டி, அவளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.