பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

125


தரையில் விழுந்த கற்களைப் பொறுக்கிக் கொண்டாள்.. நாக்கை, வாய்க்கு வெளியே துருத்திக் கொண்டாள். பிறகு, அந்தக் கற்களால், ஒரு பனைமரத்தை குறிபார்த்து எறிந்தபடியே, பாட்டி புலம்பினாள். அங்குமிங்குமாகக் குதித்தாள். அப்புறம் அழுதாள். பற்களைக் கடித்தாள். வட்டவட்டமாய் ஓடிக் காட்டினாள். பிறகு சோர்ந்து! போய், புலம்பினாள்.

"ஊருக்குச் சொல்லுமாம் பல்லி .. காடிப்பானைக்குள்ளே விழுமாம் துள்ளி... அடேய் முத்துலிங்கம், வினை தீர்த்தான் பொன்மணியக் கூட்டிக்கிட்டு ஓடலடா.. பொன்மணிதான் அவனைக் கூட்டிட்டு ஓடிட்டாள்.. இவ்வளவு குதிக்கியே, நீ யாருடா? பத்து வருஷத்துக்கு. முன்னால், ஒன்னையே சதமுன்னு நம்புன 'காலனிப்" பொண்ண என்ன பாடுபடுத்துனே? கடைசில அவள் அரளி விதையில் உயிரை முடிச்சாள். சின்னஞ்சிறுசுக ஓடுனால் ஓடட்டேண்டா... ஒன் பெண்டாட்டி கூடத்தான் ஓடுனாளாம், வினை தீர்த்தானை கொல்லுவேன்னு சொல்றியே; அவனைக் கொன்னுட்டாலும், அவன் தொட்டது தொட்டது தானடா, இந்த பைத்தியாரத், தர்மர் சின்ன வயசுல, இப்படியா இருந்தான்? இந்த அருணாசலம் பண்ணின ஒரு அந்தரங்கமான துரோகம் தெரியுமா? அந்தக் கதை நாளைக்கு... இப்போ ... இது போதும்... என் தங்கம் தமிழு மட்டும் இல்லன்னா, நாங்க, போலீஸ் அனுப்புற இடத்துக்குப் போய், இந்நேரம் புல்லு முளைச்சிருக்கும். இந்த ஊரில் தமிழரசி ஒருத்திதான் சேலை கட்டலாம்..."

பைத்தியமாய் போன முத்துமாரிப் பாட்டியை, தமிழரசி, கண்குலுங்கப் பார்த்து, வாய் குலுங்கக் கேட்டாள்:

"பாட்டி! நான் தான் அந்த தமிழு! நீ சொல்ற தமிழரசி! நான்தான் பாட்டி.... என்னைப் பாரு பாட்டி.... மெட்ராஸ் போறேன் பாட்டி..."