பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

127


திருடி அல்லது வேறு காரியங்கள் செய்பவள் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இல்லை.

வார்த்தைகளால் பாயப்போன தமிழரசி, சுற்றுப்புறச் சூழலை உணர்ந்தாள். போலீஸ்காரரின் வருகையையும், 'வரவேற்பையும்' எதிர்பாராத அவள் சிறிது துணுக்குற்றாள். கூட்டம், தன்னையே பார்ப்பதில் எரிச்சல் ஏற்பட்டது. அவரை கோபமாகப் பார்த்தபடி, கூட்டத்திற்குச் சொல்வதுபோல், அவரிடம் சொன்னாள்.

"நான் ஒரு கவுரவமான பிரஜை; கல்லூரி ஆசிரியை. எதுக்காக என்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிடுறீங்க?"

போலீஸ்காரர் மீண்டும் சத்தம் போட்டார். எல்லோரிடமும் சொல்லப்படும் 'ஸ்டாக்' பதிலை வழங்கினார்.

"என்னைக் கேட்டால் எப்படி? எது பேசணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து பேசு. உம்... தட...சீக்கிரம்...ஜல்தி... குயிக்..."

"மொதல்ல...நீங்க மரியாதை கொடுத்து பேசக் கத்துக்கங்க. நம்ம நாடு சுதந்திரமடைஞ்சுட்டது ஒங்களுக்குத் தெரியுமா? இல்ல, அதிக நாளைக்கு முன்னாலயே சுதந்திரம் வந்துட்டதுனால, அதை மறந்திட்டிங்களா?"

போலீஸ்காரரும், கூட்டமும், தமிழரசியை அண்ணாந்து பார்த்தது. பலரை, ஒரு வார்த்தை மூலமே, அது பேசப்படும்போது ஏற்படும் முகத்தோற்றம் மூலமே எடை போடும் பலே'காரரான' போலீஸ்காரர் "என் பேச்சே அப்படித்தாம்மா. சரி போகலாமா" என்றார் வினயத்துடன்.

தமிழரசி, டிக்கெட்டை வாங்கிக் கொண்டு போகலாமா என்பதுபோல் யோசித்தாள். பின்னர், டிக்கெட் வாங்காமல், போலீஸ்காரரைப் பார்த்தபடியே முன்னால் நடந்தாள். அவரும், தான் கொண்டு வந்த சைக்கிளை உருட்டிக்கொண்டு, அவளுக்கு இணையாக