பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

நெருப்புத் தடயங்கள்

நடந்தார். ரயில் நிலைய வாசிகளில் கால்வாசிப்பேர், அவர்களைப் பின்தொடரப் போனார்கள். தமிழரசிக்கு, அவமானமாக இருந்தது. எரிச்சலோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். இதைப் புரிந்து கொண்ட போலீஸ்காரர், உருண்ட சைக்கிளை நிறுத்தியபடி, கூட்டத்தைப் பார்த்து. கண்களை உருட்ட, அது உருண்டோடியது. "கச்சடாப் பயலுவ. போலீஸ்காரங்களோட யார் போனாலும் அவங்க தப்புத் தண்டா செய்ததாய் நினைக்கிற பசங்க, அதுலயும் லேடீஸ், போலீஸோட போனால், இவங்க. ரேட்டை நினைச்சுட்டு தயாராய் இருப்பாங்க" என்றார்.

தமிழரசி, போலீஸ்காரரை கோபமாகப் பார்த்தாள். அவரிடம் குதர்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அட கடவுளே. அப்படியானால் அவளைப் பார்த்த கூட்டம்... பாதி வழி வரை முண்டியடித்து வந்த கூட்டம், அவளை 'அப்படித்தான்' நினைத்திருக்குமா? பெண் என்பவள், 'அது' தவிர வேறு எதற்குமே ஏற்றவள் இல்லையா? தமிழரசி, போலீஸ்காரரிடம் படபடப்பாகப் பேசினாள்.

"சார், நீங்க முன்னால போங்க, நான் பின்னால வாரேன்."

"நான் இன்னைக்கு 'ஸ்பாட்டுக்கு' வரலைன்னாலும் ஒங்க ஊர்ல நடந்ததுல்லாம் எனக்குத் தெரியும். ஒங்களுக்கு முன்னால 'எங்கய்யா' முந்திக்கிட்டார். நீங்க அப்பவே டி. ஐ. ஜி.க்கு தந்தி கொடுத்திருக்கணும். இப்பவும் லேட்டாகல. நான் சொல்றபடி நடந்தீங்கன்னா, இந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணுல விரல் விட்டு ஆட்டலாம்."

தமிழரசி, போலீஸ்காரரை கடைக்கண்ணால் நோக்கினாள். இவர், 'மனோண்மணியத்தில்' வரும் 'குடிலனா'? இல்லை சங்க காலத்தில் இருந்த நக்கீரரா? நடந்த விஷயமும், அவளை நடத்திய விஷயமும் பிடிக்காத நல்ல மனிதரா? யாரோ எவரோ... எப்படியாவது இருந்துட்டுப் போகட்டும்...