பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

131

அறைக்கு முன்னால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கிகளைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

தமிழரசி, சுற்று முற்றும் பார்த்து விட்டு, ரைட்டரைப் பார்த்து "என் பெயர் தமிழரசி. சப்-இன்ஸ்பெக்டர் வரச் சொன்னாராம்" என்றாள். ரைட்டர், அவளை ஓரக் கண்ணால் பார்த்தபடி "அவசரமாய் வெளியே போயிருக்கார்" என்றார்.

"எப்போ வருவார்?"

"எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்?"

"ஒங்களுக்கு ஜோஸ்யம் தெரியுமா என்பதை தெரிஞ்சுக்கிறதுல எனக்கு அக்கறை இல்ல. அவர் எப்போ வருவார்னு தெரியணும், நான் இப்போ சென்னைக்குப் புறப்பட்டு நிற்கிறேன். அவர் வர லேட்டாகு முன்னால், நான் போகணும்."

"உட்காருங்கம்மா. ஒரு அடிதடி கேஸ். போற இடத்துல எப்படியோ' பட், வந்துடுவார். உட்காருங்க.?"

தமிழரசி, உட்கார்ந்தாள்.

ஒரு மணி நேரம் ஓடி, முப்பது நிமிடம் கழிந்து கொண்டிருந்தது. அவள், எரிச்சலோடு கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். போவது போல் எழுந்து, எழுந்து நின்றாள். முத்துலிங்கம், இன்னும் பேசிக் கொண்டே இருந்தார். அப்போது, வேப்ப மரத்தடி; இப்போது, பூவரசு மரத்தடி; அவ்வளவு தான் வித்யாசம், ரயிலுக்கு நேரமாகிக் கொண்டிருப்பது உறைத்தது. உடனே, 'வருவது வரட்டும்' என்ற வைராக்கியத்துடன், தமிழரசி உறுதியோடு எழுந்தாள். எழுந்தவள் மீண்டும் உட்கார்ந்தாள்.

மோட்டார் பைக்கில், சப்-இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் வண்டிக்கு, சர்வ கட்சி லோகல் தலைவர்கள், அகலமாகவே வழி விட்டார்கள். வண்டியை 'ஆப்' செய்யா-