பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

நெருப்புத் தடயங்கள்


தமிழரசி எழுந்தாள். அவளை, இன்னும் லாக்கப்பில் தள்ளாமல் இருக்காரே என்பது மாதிரி முத்துலிங்கத்தின் உதடுகள் துடித்தன. இதற்குள், லோகல் லீடர்களுக்கு தங்களது காரியம் தாமதப்படுவதில் எரிச்சல். அவர்களுள் ஒருவர், "அந்தம்மா சொல்றதும் ஒரு வகையில் சரிதான். சட்டுப்புட்டுன்னு விசாரிங்களேன்" என்றார். சப்-இன்ஸ்பெக்டர், அவர்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பவர் போல், ஒரு காகிதத்தை கையில் வைத்தபடியே, அவளிடம் கேட்டார்.

"முத்துலிங்கம், தன்னோட மைனர் தங்கை பொன்மணியை வினைதீர்த்தான் கடத்திப் போறதுக்கு, நீங்க தான் உடந்தைன்னு ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கார்."

"நீங்க ஏழைக் குடிமக்களான மாடக்கண்ணுவையும், கலாவதியையும் கொடுமைப் படுத்தும்போது என்ன சொன்னேனோ, அதைத்தான் இப்பவும் சொல்றேன். அதற்கும், எனக்கும் சம்பந்தமில்ல. அதோடு பொன்மணி மைனர் பெண்ணல்ல."

"நீங்களே அனுமானித்தால் எப்படி?"

வாக்குவாதம் பலத்தபோது, தாமோதரன் எவரும் எதிர்பாராத வகையில், கையில் சூட்கேசுடன் வந்தான். சப்-இன்ஸ்பெக்டர், அவனை உட்காரச் சொன்னார். அவன் நின்றபடியே பதிலளித்தான். பிறகு, "பொன்மணி விவகாரத்திற்கும், மிஸ். தமிழரசிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இதை நீங்க சாட்சியாய் கூட பதிவு செய்துக்கலாம்," என்றான்.

சுமைதாங்கிக் கல் போல் அசையாது நின்ற தாமோதரனை, சப்-இன்ஸ்பெக்டர் முகம் சுழிக்கப் பார்த்தார். முத்துலிங்கம், கண்களில் கனல் கக்கப் பார்த்தார். என்றாலும், அவன் வருகையால் தமிழரசி கோபம் குறைந்தவளாகத் தெரியவில்லை.