பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

135

“நான் வாரேன் சார். இதுதான் என் மெட்ராஸ் முகவரி. எனக்கு அரெஸ்ட் வாரண்ட் அனுப்பனுமுன்னால், இதுதான் என் அட்ரஸ்.”

தமிழரசி, திரும்பிப் பாராமல், திரும்பினுள். சப்-இன்ஸ்பெக்டர் அவளைத் தடுக்கவில்லை.

போலீஸ் நிலையத்திற்கு வெளியே தமிழரசி வந்த போது, சற்றுத் தொலைவில், ஆலமர நிழலில், தலைகளில் கை வைத்தபடி இருந்த மாடக்கண்ணுவும், கலாவதியும், அவளை நோக்கி ஓடி வந்து, ஆளுக்கு ஒருவராக, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டார்கள். யாரும், யாருடனும் பேசவில்லை. நீண்ட மவுனம். நெடிய மவுனம். மூவரும், பஸ் நிலையத்தைப் பார்த்து நடந்தார்கள். போக வேண்டிய ரயில், இந்நேரம் தென்காசியில் இருந்து போயிருக்கும். இனி திருநெல்வேலிக்குப் போய், அங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில்தான் சென்னைக்குப் போகவேண்டும்.

பஸ் நிலையத்தில் தமிழரசி, இருவருக்கும் இடையில் நின்றாள். ஊருக்கே திரும்பலாமா என்று நினைத்தாள். கலாவதியையும், சித்தப்பாவையும் போலீசார் விசாரணை என்ற பேரில் மீண்டும் தாக்குவார்களோ என்ற பயம். அந்த அளவிற்கு அவர்கள் துணிய மாட்டார்கள் என்ற தெளிவு. போவதற்கு முன்பு, தாமோதரனே ஒரு தடவையாவது பார்த்துவிட்டுப் போய்விட வேண்டும் என்பது போல், தமிழரசியிடம் ஒரு தாகம். சில பஸ்களை, அசட்டையாக விட்டு விட்டாள். ‘கடைசியில் அவர் என்னைக் கை விடவில்லை. எப்படிச் சொல்ல முடியும்? விசாரணை வலுத்து, நான் மேல் அதிகாரிகளிடம் புகார் செய்து, அதனால் தனது வேலைக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்று நினைத்து, அவர் முன் யோசனையோடு நடந்திருக்கலாமா... எவ்வளவு நெருக்கமாய் பழகினோம்... ஒரு வார்த்தை ‘ஐ அம் சாரி தமிழு’ என்று சொல்லியிருக்கலாமே... மிஸ் தமிழரசியாம்...’