பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

நெருப்புத் தடயங்கள்

தமிழரசி, தன்னுள் அவனையும், அவனுள் தன்னையும் தேடிக்கொண்டிருந்தபோது, தாமோதரன், முத்துலிங்கம் கோஷ்டியுடன் வந்து கொண்டிருந்தான், அவளைப் பார்த்து, லேசாய் திடுக்கிட்டது போல், நடக்காமல் நின்றான். பின்னால் வந்த அண்ணனை ஒரு தடவையும், அவளை ஒரு தடவையும் பார்த்துக் கொண்டான். பிறகு, ஆகாயத்துள் எதையோ தேடுபவன் போல், கண்களால் துழாவினான். முத்துலிங்கம், அவன் முதுகைத் தட்டினார். அப்புறம், அவர்கள் ரயில் நிலையத்தைப் பார்த்து நடந்தார்கள்.

தாமோதரனைப் பாராதது போல், உடம்பில் எந்தவித அசைவுமின்றி நின்ற தமிழரசியிடம், "தாமுத்தான் நாகர்கோவில் போறார் போலுக்கு ... ரயில்வே ஸ்டேஷனைப் பார்த்து நடக்காங்க" என்றாள் கலாவதி. அவளுக்கும் குரல் உடைந்தது. மாடக்கண்ணு, ஏதோ ஒன்று புரிந்தது போலவும், ஆனால் அது, தன் சக்திக்கு மீறியது என்பது போலவும், கண்களை சிமிட்டியபடியே தலையைத் தடவியபடி, தமிழரசியைப் பார்த்தார், தமிழரசியோ, கலாவதிக்கு எந்தப் பதிலையும் வழங்காமல், நிலைகுலைந்து நின்றாள்.

'தாமு... தாமு... இனிமேல் நம் இருவருக்கும் இடையே கசப்பான நாட்கள் கடக்கலாம். ஆனாலும், அந்த காசியாபிள்ளை கிணறும், அந்த இனித்த நாட்களும் என்னளவில் வாழ்க்கை என்னைத் தாலாட்டிய நாட்கள். காதல் பாட்டோடு, கல்யாணி ராகத்துடன், நான் என்னை மறந்த நாட்கள்!

இனிமேல் வரும் நாட்கள் எப்படியோ...நாட்களோ... நரகங்களோ... எதையோ நினைச்சேன்...எதையோ முடிச்சேன். எதுலயோ முடிஞ்சிட்டேன். தாமு... என் தாமு... ஒங்களை நான் இனிமேல் பார்ப்பேனா? சந்தர்ப்பம் பார்க்க விடுமா?"