பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

137


நெல்லை பஸ் வந்தது. பார்வை கலையாமல் நின்ற தமிழரசியை, கலாவதி உலுக்கினாள். தமிழரசி தயங்கினாள். ஒருவேளை ரயில் போய்விட்டது என்று 'தாமு' இங்கே வந்தாலும் வருவாரோ? இன்னொரு நடவை, அவரை ஆசைதீரப் பார்த்து விட்டுப் போகலாமே. பஸ், சத்தம் போட்டது. தமிழரசி, கலாவதியிடம் இருந்த சூட்கேசை வாங்கிக் கொண்டாள். அவளைக் கட்டியணைத்து, முகத்தில் முத்தம் கொடுத்து விட்டு, தன் தோளில் பட்ட துளிகளுக்குச் சொந்தமான கண்களை மருட்சியோடு பார்த்த சித்தப்பாவின் கரங்களை எடுத்து கண்களில் ஒற்றியபடி, தமிழரசி பஸ்சிற்குள் வரவும், அவளை நிலையிழக்கச் செய்தபடி, பஸ் விசில் சத்தம் முடியு முன்னாலயே பாய்ந்தது.

தனித்துவிடப்பட்ட மாடக்கண்ணுவும், கலாவதியும் புழுதித் தடயங்களை விட்டுச் சென்ற பஸ்சையே வெறித்துப் பார்த்தார்கள். பிறகு ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஊரை நோக்கி நடந்தார்கள்.

ரயில் நிலையத்தில், தாமோதரனை, நாகர்கோவிலுக்கு வைதபடியே வழியனுப்பி விட்டு, திரும்பிக் கொண்டிருந்த முத்துலிங்கமும், அவரது கையாட்களும், காலாட்களும், மாடக் கண்ணுவையும், கலாவதியையும் 'வெறி'த்துப் பார்த்தார்கள். எல்லா வகையிலும் அவமானப் பட்டதாகக் கருதிய முத்துலிங்கம், தன் ஆட்களிடம் ஆணையிட்டார்:

"ரெண்டு பேரையும், என் தோட்டத்துக்கு இழுத்துட்டு வாங்க. போலீஸ் செய்து காட்ட முடியாததை, நான் செய்து காட்டுறேன்?"