பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


14

ரவு கொடுங்கோலோச்சிய வேளை.

ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தொலை வில் உள்ள முத்துலிங்கம் தோட்டம். கிணற்றை மறைக்கும்படி. எருக்கலைச் செடிகள் படர்ந்திருந்தன. நான்கு பக்கத்தில் மூன்று பக்கம் சரல் மேடுகள் குவிந்து கிடந்தன. ஒரு பக்கத்தில் கமலைக் கிடங்கு, பள்ளமாய் நீண்டிருந்தது. பச்சைப்பசேலென்ற சோளப் பயிர்கள்- ஆறடிக்கு மேல் வளர்ந்து, தோகை விரித்து காற்றில் ஆடின. வரப்போர ஆமணக்குச் செடிகளில், 'கொட்டை முத்துக்கள்' வெடித்துக் கொண்டிருந்தன. ஆடிக் காற்று தென்னை மரவோலைகளைக் குனிவித்து, சோளத் தட்டைகளை மண்டியிட வைத்து, 'உய்' என்ற கூச்சலுடன் பேயாய், பேத்தலாய் ஒப்பாரியிட்டது.

ஆங்காங்கே இருந்த எலி வளைகளுக்குள், பாம்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. 'விருவு' எனக் கூறப்படும் காட்டுப் பூனைகள், பூவரசு மரங்களிலும், ஆலமரங்களிலும், அடைக்கலமான பறவைகளைப் பிடித்துக்கொண்டிருந்தன. இவற்றைப் பார்த்து, காகங்களும், கரிச்சான்களும் தங்கள் பகையை மறந்து, ஆகாயத்தில் ஒன்கை, ஓல ஒலியே உயிரொலியாக வட்டமடித்தன. வண்ணத்துப் பூச்சிகள், வலையில் மாட்ட, அதைப்பின்னிய சிலந்திகள் தன் வலையை வேகவேகமாய் சுற்றி, அந்தப் பூச்சிகளைக் கசக்கிக் கொண்டிருந்தன, அருகே இருந்த சுடுகாட்டில், நரிகள் அகோரமாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

சரல் மேட்டில், கையும், காலும் தனித்தனியாகக் கட்டப்பட்டு, பிறகு அவை ஒன்றோடொன்றாய் சேர்த்துக் கட்டப்பட்டு, ஆறடி அளவிலான மேனி மூன்றடி அளவில் குறுக்கப்பட்டுக் குப்புறக்கிடந்த தந்தையையே கலாவதி கமலைக் கிடங்கில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.