பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

139

“அய்யாவ... விட்டுடுங்கய்யா... விட்டுடுங்கய்யா” என்று சொல்லிச் சொல்லி, அழுதழுது, அவளுக்கு வாயடைத்து விட்டது. கண்ணீர் தீர்ந்து விட்டது. அவரைப் பார்த்துப் பார்த்து, பார்வையும் தீர்ந்துவிட்டது. இப்போது அவள் அரை மயக்க நிலையில், மரணமும், வாழ்வும் ஒன்றாக, தலையில் கை வைத்து, முட்டிக்கால்களில் முகம் புதைத்து வெம்பிக் கொண்டிருந்தாள்.

தமிழரசியை, பஸ்ஸில் பறிகொடுத்துவிட்டு, தந்தைக்கு விரைவில் சமைத்துப் போட வேண்டும் என்று தான், அவள் ஊரை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள். இருவரும், தலைச்சுற்றலும், உடல் உற்றலுமாய் நடந்து கொண்டிருந்த போது, நான்கைந்துபேர், அவர்களை வழி மறித்தார்கள். திகைத்து நின்ற மாடக் கண்ணுவையும், கலாவதியையும், தங்களுக்குள்ளே பங்கு போட்டுப் பிடித்துக் கொண்டார்கள். இரண்டு பேரையும் தரதரவென்று இழுத்தும், அடியடி என்று அடித்தும், இழு இழு என்று இழுத்தும், இந்தத் தோட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாலேயே கொண்டு வந்து போட்டார்கள்.

மாடக்கண்ணுவை, ‘தாம்புக்’ கயிற்றாலும், வாழை நாராலும் கட்டி, சரல் மேட்டில் உருட்டிப் போட்டு விட்டு “கிழட்டுப் பயலே...கிடடா... கிட.. எங்க பொன்மணி இருக்கிற இடத்தைச் சொல்றது வரைக்கும் ஒன்னை விடப்போறதில்ல” என்று கொக்கரித்தார்கள்.

அன்று, கோழி கூவியதில் இருந்து, இந்த இரவுவரை, நடந்ததையும், நடப்பதையும் நம்ப முடியாமல் போன கலாவதி, கட்டப்பட்டவரை மீட்கப் போனபோது, அந்த ஐவரும் அவளைச் சுற்றி நின்று கொண்டார்கள், அவர்களையே, அவள் வியப்பாக, திகைப்பாக, நம்ப முடியாதவளாகப் பார்த்தாள்.