பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

நெருப்புத் தடயங்கள்


ஒருவர், பிள்ளையார் மாமா—முத்துலிங்கத்தின் சித்தப்பா. வழியில் பார்க்கும் போதெல்லாம் 'என்ன மருமகளே... எப்படி சவுக்கியமெல்லாம்' என்று குசலம் விசாரித்தவர். இன்னொருவர் வீரபத்திர மச்சான். 'ஒன் அழகுக்கு நீ சினிமாவுல சேரணும்' என்று விகற்பமில்லாமல் கிண்டல் செய்பவர். மூன்றாவது ஆள், முத்துத் தாத்தா. இவரும் 'கலாவதி... வயசு காலாவதியாவுது பிள்ள... ஒனக்கு மாப்பிள்ள கிடைக்காட்டால் சொல்லு... தாத்தா இருக்கேன் தயாராய்' என்று லூட்டி செய்பவர். இதேமாதிரித்தான் இந்த மாரிமுத்து மச்சானும், பேச்சிமுத்து மாமாவும். ஆனால் இப்போதோ, இந்த தெரிந்த முகங்களே, எமராஜ முகங்களாய் அவளுக்குத் தென்பட்டன. இந்த சினேகித முகங்களால், எப்படி இவ்வளவு சீக்கிரமாய் சினப்பு முகங்களாய் ஆக முடிகிறது?

அவர்களின் நீண்டகால பழக்கத்தை வைத்து, தங்களைப் பிடிக்கும்போதும், தந்தையைக் கட்டிப் போடும் போதும், கலாவதிக்கு வேடிக்கை மாதிரியே தெரிந்தது. அப்பா, வலி தாளாமல் கத்தியபோதுதான் கலாவதி, சுயத்திற்கு வந்தாள். மண்டியிட்டாள். மன்றாடினாள், கையெடுத்துக் கும்பிட்டாள், நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து, ஒவ்வொருத்தர் காலாக, ஊர்ந்து ஊர்ந்து தொட்டுத் தொட்டுக் கும்பிட்டாள். அழுதழுது புலம்பினாள். "ஒங்கள கையெடுத்துக் கும்புடுறேய்யா... ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டுய்யா... நாங்க ஒரு பாவமும் அறியாதவங்கய்யா... அதோ பாருங்கய்யா... எங்கய்யா எப்டி வலியில துடிக்காருன்னு பாருங்கய்யா... ஏற்கனவே போலீஸ்ல அடிபட்டு உடம்புல்லாம் காயமய்யா... காயம் பட்ட இடத்துல கயிற்றைக் கட்டுனால் எப்படிய்யா? என்னை வேணுமுன்னால் கட்டிப் போடுங்கய்யா... அய்யாவ விட்டுடுங்கய்யா... வீரபத்திர மச்சான்.... பிள்ளையார் மாமா... முத்துத் தாத்தா... எங்கய்யாவ இப்டி நடத்த ஒங்களுக்கு எப்டி மனசு