பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

143

கொல்றேய்யா. அவரு இப்டி துடிச்சு சாகிறதவிட, மொத்தமாய் செத்துடலாம்” என்று சொல்லியபடியே, கொலைப் பாசம் கொண்டு, தூக்கிய கல்லோடு, கலாவதி சரல் மேட்டுக்குத் தாவப்போனாள். மகாத்மா காந்தி பார்த்த கன்றுக்குட்டி போல் துடித்தவரைப் பார்த்து பாயப் போனாள். அந்த ஐவரும் அவளை மடக்கியபடி, சிரித்தார்கள். சாராயச் சிரிப்பாய் சிரித்தார்கள் . “அவ்வளவு சீக்கிரமாய் உயிர் போகலாமா?... போகத் தான் விடுவோமா?” என்றார்கள்.

அவர்கள், ஏதோ விட்டுக் கொடுப்பதற்காகத்தான், அப்படிச் சிரிக்கிறார்கள் என்று நினைத்த கலாவதி, மீண்டும் மன்றாடினாள் :

“தப்புப் பண்ணுனவன் எனக்கு அண்ணன், அவருக்கு மகன்னு இருந்தால் நாங்க என்னய்யா பண்ணுவோம்? நிர்க்கதியாய் நிற்கிற எங்களுக்கு உதவ வேண்டிய நீங்களே இப்படிச் செய்தால் எப்படிய்யா? எங்கள விட்டுடுங்கய்யா. இந்த ஊர்ல கூட இருக்கல. கண் காணாத இடத்துக்கு வேணுமுன்னாலும் ஓடிப் போயிடுறோம்.”

உடனே வீரபத்திரன், “ஒண்ணன் இருக்கிற இடத்துக்கு போயிடுறோமுன்னு சொல்றியா? தாராளமாய் போ! நாங்க ஒன்னை ஒன்றுமே செய்யல, போறவளை தடுக்கப் போறதுமில்ல. வேணுமானால் போ! ஒப்பனத் தான் கட்டிப் போட்டிருக்கோம். ஒன்னைக் கட்டிப் போடல. போகணுமுன்னால் போ. ஏண்டா, இவள் போகப் போறாளாம்... போவட்டும்” என்றார், பெரிதாய் நகைச்சுவையோடு பேசுகிற நினைப்பில். மற்றவர்கள், குரூரமாகச் சிரித்தார்கள்.

கலாவதி, பேசுவதை நிறுத்திக் கொண்டாள். குற்றுயிரும், கொலையுயிருமாய் கிடந்த தந்தையைப் பார்ப்பதை மறுத்துக் கொண்டாள். தந்தையைப் பார்க்கக்