பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

145


காலடிக்கு வந்து "மச்சான்... மச்சான்" என்றாள் அவரோ சிங்கம் தோற்கும்படி கர்ஜித்தார்.

"ஒப்பன விட்டாலும், ஒன்னை விடப் போறதில்ல. செருக்கி மவளே! நீ தானே ஒங்க அண்ணனுக்கும், எங்க வீட்டு மூதேவிக்கும் காவல் காத்தது? ஒனக்கு இப்போ எவன் காவல் காக்க வாரான்னு பார்ப்போம்?"

"சத்தியமாய் நான் அப்படிப்பட்ட காரியத்த செய்யல மச்சான். என்னை நம்பும் மச்சான்."

"சரி போனது போவட்டும். நான் ஒன்னை நம்பணுமுன்னால், ஒன் அண்ணன் இருக்கிற இடத்தைச் சொல்லிடு. ஒன்மேல மேற்கொண்டு ஒரு துரும்புகூட விழாது."

"எனக்கு, அந்த நொறுங்குவான் போன இடம் தெரிஞ்சால் தானே சொல்ல முடியும் மச்சான்? எனக்கு எதுவுமே தெரியாது."

முத்துலிங்கம், வீராப்பாகச் சிரித்தார். பிறகு, அவர், அடிமேல் அடி வைத்து, சரல் மேட்டில் ஏறினார். குப்புறக் கிடந்த குறுகிய மாடக்கண்ணுவை காலால் இடறினார். அதனால் மயக்கம் கலைந்த மாடக்கண்ணு, மகளைப் போலவே, அந்த மகானுபாவரின் காலைப் பிடிக்க முடியாமல் கட்டப்பட்டிருந்ததால், தனது தலையை எடுத்து, அவர் திருப்பாதத்தில் வைத்து உருட்டியபடியே-

"முத்துலிங்கம்! ஒன்னையும் சின்ன வயசுல சில சமயத்துல என் தோள்ல எடுத்திருக்கேன். ஒம்மா எனக்கு ஒரு வகையில் சொந்தண்டா. என்னையா இந்தப் பாடுபடுத்துறே? என்னையா?" என்று சொன்னபடியே, வறண்ட கிணற்றில், சிறிய இடைவெளியில் ஊறிய நீர் போல், பொட்டல் கண்களை, புலம்பல் நீரில் நனைத்தார்.

முத்துலிங்கம், இறுதித் தீர்ப்பு வழங்கினார்.

"இந்தா பாருடா கிழட்டுப் பயலே! ஒன் மகன் தப்பிச்சது மாதிரி, நீயும் தப்பிச்சிடலாமுன்னு நெனைக்-

நெ.-10