பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

நெருப்புத் தடயங்கள்


கேட்டதே தவிர, தமிழின் சாரம் கேட்கவில்லை. வெளித்தளத்தில் - 'முற்றம்' என்று சர்வ சாதாரணமாய் சொல்ல முடியாத, மண் தளம் போடாமல் சிமெண்டால் தளமான திறந்த வெளிக்கூடத்தில், ஊர்ப்பெரியவர்கள் பெஞ்சுகளிலும், நாற்காலிகளிலும் உட்கார்ந்தபடி, வெற்றிவையை சுண்ணாம்பால் வெள்ளையடித்து, வாயில் ரத்தச் சிவப்பு நீரைச் சுவைத்துக் கொண்டிருந்தபோது-

பாட்டி முத்துமாரி, ' படபட உடம்போடு, தடதட சத்தத்தோடு, தமிழரசி இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தாள். பலாப்பழம் போல் தோல் சுருக்கங்கள் உடம்பெங்கும் தோன்ற, எழுபது வயதிலும் பல் போகாமலும், சொல் போகாமலும் கூன்படா முதுகோடு, குறுகாத தலையோடு அவள் ஓடிக் கொண்டிருந்தாள். நரைபட்ட தலைமுடிக்கும், தோள் வரை வியாபித்த வெள்ளைப் புடவைக்கும் இடையே, வெடித்த பருத்திச் செடிகளுக்கு இடையே உள்ள ஆமணக்குத் தண்டு போல் தோன்றிய கழுத்தை முன்நோக்கி நீட்டியபடி கத்தினாள்."

"எனக்குக் கொஞ்சம் வழிவிடுங்க அம்மாளு... என் தங்கத்த பார்க்க எனக்கும் ஆச இருக்காதா?..."

பெண்கள் எல்லோரும் புயல்பட்ட மரக்கிளைகள் போல் விலகிக் கொண்டார்கள். இந்த முத்துமாரிப் பாட்டி, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தன் ஒரே ஒரு மகளை, எட்டு வயதில் சாகக் கொடுத்தாளாம். அதனால், மூன்றாண்டு காலம் மூளை பிசகி, அவள் கைக்கும், காலுக்கும் விலங்கு போட்டிருந்தார்களாம். பிறகு, பைத்தியம் போய்விட்டதென்றாலும், இப்பவும் ஆண்டுக்கு மூன்று தடவையாவது அது, அவளை எட்டிப் பார்க்குமாம். எங்கேயாவது செத்த வீட்டில், 'துஷ்டி' கேட்பதற்காகப் போகும் போது புத்திசாலியாகப் போகும் பாட்டி, திரும்பும்போது, பைத்தியமாகத் திரும்புவாளாம்.