பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

147


முத்துலிங்கம், பதிலளிக்கவில்லை. எல்லாவற்றையும் எதிர்பார்த்தவர் போல், கையாட்களிடம் வந்தார். “உம்... நெருப்ப மூட்டுங்கப்பா... இந்தா... இதைச் சுட வை... ரெண்டுல ஒண்ண பாத்துடலாம்” என்றார்.

கையாட்கள், அங்குமிங்குமாய் குதி போட்டுச் சென்றார்கள். பழுத்து விழுந்த தென்னை ஒலைகளையும் தூக்கணுங்குருவிக் கூடுகளையும், குஞ்சுகளோடும், குருவிகளோடும் எடுத்தார்கள். சோளப்பயிர் காவலுக்காய் போடப்பட்ட பரணில் இருந்து மண்ணெண்ணெய் டின்னை எடுத்தார்கள். ஒருவன் தீக்குச்சியைக் கிழித்தபோது, இன்னொருவன் அது காற்றில் அணையாமல் இருக்க, தன் வேட்டியால் திரை போட்டான்.

கலாவதியின் காயங்களைப் போல், நெருப்பு, விறகுகளில் அங்குமிங்கு மாய் சிவப்புச் சிவப்பாய் பற்றி, செந்தீயானது. ‘உய்...உய்’ என்ற சத்தத்துடன், பாம்பு படமெடுத்து ஆடுவது போல், காற்றில் ஆடியது. கலாவதியின் பக்கம் ஒரு தடவை. மாடக்கண்ணுவின் பக்கம் மற்றாெரு தடவை. அதற்குள் இருந்த வளைந்த கதிரருவாளும் சிவப்பாகிக் கொண்டிருந்தது. நெருப்பின் ஒளியில், மாடக்கண்ணு, லேசாகத் தலையைத் தூக்கி மகளைப் பார்த்தார். அவளோ, தந்தையை மருவி மருவிப் பார்த்தாள். ஒரேயடியாகப் பார்த்தாள்.

முத்துலிங்கம், சிவப்பு அரிவாளின் பிடியைப் பிடித்த படியே, கலாவதியை நெருங்கினார் அவள் நடப்பது நடக்கட்டும் என்பதுபோல் இருந்தாள். அதை உதாசீனமாக நினைத்த முத்துலிங்கம் கையாட்களிடம் கர்ஜித்தார். காளி கோவில் சாமியாடிகள், அறுத்த ஆட்டின் ரத்தத்தை குடிக்கும்போது, குரல் எழுப்புவார்களே, அப்படிப்பட்ட குரலில் ஆணையிட்டார்.

“இவள் உடம்புல சேலயும் ஜாக்கெட்டும் இருந்தால் எப்படிப்பா சூடு போட முடியும்? உம்... சீக்கிரம் இவள் வாயில சூடு வச்சால் சொல்ல மாட்டாள்!”