பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

149

ஆனால், கட்டிப் போட்ட மாடக்கண்ணுவும், கட்டாமல் போட்ட கலாவதியும் ‘உண்மையை’ சொல்ல மறுத்ததை, அவர்கள் தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்தார். இனிமேல், வினை தீர்த்தானை கண்டு பிடிக்கவே முடியாது என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டதும், அவர் வெறியரானார்.

‘முத்துலிங்கம் தங்கச்சியை, கூட்டிக்கிட்டுப் போன வினை தீர்த்தான் குடும்பத்தை, நிர்மூலமாக்குனவனாக்கும் இந்த முத்துலிங்கம்’ என்று ஊரார், தன்னை பயபக்தியுடன் பாராட்ட வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது. அவர் கண் முன்னால், வினை தீர்த்தான்–பொன் மணி ஜோடிக்கு, கலாவதி தன் வீட்டு வாசலில் காவல் காப்பது போல் ஒரு கற்பனைக் காட்சி தோன்றியது. அந்தக் காட்சி விரிய விரிய, அவருள் இருந்த மிச்சம் மீதி மனிதாபிமானமும், மிருகத்தனமாய் மாறியது.

கலாவதியை நிர்வாணப்படுத்தத் தயங்கிய கையாட்களை, முத்துலிங்கம் அதட்டினார்.

“இதுல யோசிக்கதுக்கு என்ன இருக்கு? நம்மள பேடிப் பயலுவன்னு நெனச்சு இவள் ‘கல்லுளி மங்கியா’ கிடக்குறது ஒங்களுக்கு உறைக்கலியா? ஒங்களால முடியாட்டால் சொல்லுங்க, நான் செய்யுறேன். அப்புறம் ஒங்களுக்குன்னு ஏதாவது வந்தால், என் கிட்ட வரப்படாது. நாம் இனிமேலும் சும்மா இருந்தால், பேடியிலயும் பேடி பெரிய பேடின்னு அர்த்தம்.”

கையாட்கள், தாங்கள் பேடிகள் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவோ என்னவோ, சும்மா இருக்கவில்லை. உடம்பையே கையில் பிடித்து நிற்பவள்போல், நின்று, கையெடுத்துக் கும்பிடப் போன கலாவதிமேல், கட்டு விரியன் பாம்புபோல் பாய்ந்தார்கள். ஏற்கனவே அவிழ்ந்திருந்த கலாவதியின் சேலை, அவர்கள் கையோடு வந்தது. பாவாடை துண்டு துண்டாக வந்தது. அவள் முண்டி-