பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெருப்புத் தடயங்கள்

யடித்து முருங்கை மர வேரில் விழுந்தாள். அதில் சிக்கிக் கிழிந்த ஜாக்கெட், அவர்களிடம் கந்தல் கந்தலாகப் போனது. அவர்கள் நிர்வாணப் படுத்தும்போது, கலாவதி சொன்ன ஒரே வார்த்தை:

“எய்யா ... என்னப் பெத்த அய்யா ...”

எரியும் நெருப்பில், விரியும் வெளிச்சத்தில், மகள் படும் மானப்பாட்டைப் பார்த்துவிட்டு, மாடக்கண்ணு சொன்ன ஒரே வார்த்தை :

“மவளே... மவளே!”

கலாவதி, முதலில் உடம்பை மறைக்கப் போனாள். அதற்காக, உடம்பை குறுக்கப் போனாள். அது முடியாது என்பது தெரிந்ததும், கண்ணோடு சேர்த்து, முகத்தைக் கரங்களால் மூடியபடி, எவர்கள் துகிலுரிந்தார்களோ, அவர்களிடமே ஆதரவு தேடுபவள் போல் சாய்ந்தாள். அவர்கள், ஆணுடம்புக்காரர்கள் என்றோ, தன்னுடம்பு பெண்னுடம்பு என்றோ பேதம் தெரியாமல் பேதலித்துச் சாய்ந்தாள்.

வழியிலே, ஒரு கிழவியைப் பார்த்தால்கூட, மாராப்புச் சேலையை இழுத்து மூடி, பாவாடை தெரியாமல் இருக்க, இடுப்புச் சேலையை தூக்கி நிறுத்தி, வயிறு தெரியாமல் இருக்க, முந்தானைச் சேலையை முன்னால்மூடி நடந்து பழகிய கலாவதி, இப்போது, மானத்தை மறைக்க முடியாமல் வானத்தையே பார்த்தாள். மாடக்கண்ணுவோ, நெற்றியை ஒரு கல்லில் மோதியபடி, குப்புறப் புரண்டார்.

திரௌபதியைப் போல், கையெடுத்துக் கும்பிட அவளுக்கு கண்ணன் இல்லை. வாசகர்கள் எதிர்பார்ப்பது போல்–சினிமாக்காரர்கள் நம்மை நம்ப வைப்பது போல், வினை தீர்த்தான் அங்கே திடீரென்று குதிக்கவில்லை. தமிழரசி, ரயில் கிடைக்காமல் ஊருக்குத் திரும்பி, ஆட்களைத் திரட்டிக் கொண்டு அங்கே வரவில்லை.