பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

நெருப்புத் தடயங்கள்

பலவந்தமாய்தான் அம்மணமாக்குனே. ஆனால் ஒன் அம்மா பலர்கிட்ட அம்மணமாய் நின்னவள். அந்த புத்திய கடைசில காட்டிட்ட பாத்தியா...”

அம்மாவின் கற்பை சோதித்துப் பார்க்காமலே தெரிந்து கொண்ட முத்துலிங்கம், கதிரருவாளை கீழே போட்டுவிட்டு, சரல்மேட்டைப் பார்த்து ஓடினார். மாடக் கண்ணுவின் தலைக்கு, தனது வலது காலை அம்பாக்கி, அவர் ஓடிச்சேர்வதற்குள்—

மாடக்கண்ணு, தனது உடம்பின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி, மூச்சை நிறுத்தி, முன் நெற்றியைச் சாய்த்து, சரல்மேட்டில் இருந்து தன்னைத்தானே உருட்டினார். துவக்கத்தில், உருளாதது போல் அங்குமிங்குமாக ஆடிய உடம்பு, அவர் அடிவயிற்று நெருப்பை, கரி எஞ்ஜின்போல் தலைக்குக் கொண்டு வந்ததும், சரல் மேட்டுச் சரிவில் உருண்டோடியது. சுருண்டு சுருண்டு, உருண்டு உருண்டு, விழுந்து விழுந்து போன அந்த உடம்பை, திடீரென்று காணவில்லை, ‘மூலைப்படி’ வரை தண்ணீர் நிரம்பிய கிணற்றில் மட்டும் ‘தொய்’ என்று சத்தம் கேட்டது. நெருப்பின் ஒளியில், தீர்த்திவலைகள், அந்தரத்தில் வானவில்லாய்த் தோன்றி, பின்பு வடிவம் குலைந்தன.

முத்துலிங்கம் உட்பட எல்லோரும் பிரமித்தபடி, கிணற்றுப் பக்கம் நடந்தார்கள். கையில் உள்ள பேட்டரி லைட்டைப் போட்டு, கிணற்றுக்குள் பார்த்தார்கள், கிணற்று நீர், சுழிபோட்டுக் கொண்டிருந்தது. நடுப் பாகத்தில் குமிழிகள் தோன்றின. மாடக்கண்ணு, உயிர்த் தாகம் தீர, தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ?

எல்லோருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள், கிணறு மாதிரியே, வாயைப் பண்ணினார்கள். ‘உம்... உம்...ஆங்... ஆங்’ என்ற சத்தத்தைக் கேட்டு, தலை திருப்பினார்கள்.