பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

நெருப்புத் தடயங்கள்

“அப்படிக் கேட்டிங்கன்ன அது முறை. ஒங்கள நான் கைவிட்டுடுவேனா? தாமோதரன் எதுக்கு இருக்கான்? ஒங்க ஒடம்புல ஒரு துரும்பு பட்டாலும், நானே கையைக் காலே கட்டிக்கிட்டு இந்தக் கிணத்துல விழுவேன். மாடக் கண்ணு தலைவிதி கிணத்துல முடிஞ்சால், நீங்களோ நானே என்ன செய்ய முடியும்?”

“இப்போ என்னப்பா செய்யுறது?”

“இவள தூக்கிக்கிட்டுப் போய் என் மயினி மகன் டாக்டர்... டவுன்ல நர்ஸிங் ஹோம் வச்சிருக்கிருன் பாருங்க... அதுல சேர்த்துடுங்க, உம் சரி தூக்குங்க...”

“நீ வர்லயா?”

“வர்ல”

“நாங்க மட்டும் எதுக்காகப் போகணும்?”

“ஏன் இப்படிக் கத்துறீங்க? நாம் எல்லாரும் போயிட்டால், ஊர்ல சந்தேகம் வந்துடும். அதலை ரெண்டு பேரு போனால் போதும். நான் காலையில பணத்தோட வாறேன். வீரபத்திரன் அண்ணனுக்குத்தான், என் மயினி மகனை நல்லாத் தெரியுமே. இவளை அங்கே சேர்க்கிறது, யாருக்கும் தெரியப்படாதுன்னு அவன் கிட்ட சொல்லிடுங்க.”

“ஒருவேள இவளுக்கு வழில ஏதாவது ஆயிட்டால்?”

“சின்னப்பிள்ளை மாதிரி பேசுறது தப்பு. வழியில குழி வெட்டிப் புதைச்சிட்டு வர வேண்டியதுதானே.”

செத்தவள் போல் கிடந்த கலாவதியின் மூக்கில், பேச்சிமுத்து விரல் வைத்துப் பார்த்தார். மூச்சு வந்தது. அவள் உடம்பின் பல இடங்கள், பொசுங்கியும், பிதுங்கியும் கிடந்தன. உடம்பெங்கும் பொசுங்கிப் போன, கருப்புக் கருப்பான கொடுமை முத்திரைகள். சிலவற்றில், வெள்ளைக் கொப்பளங்கள். இன்னும் ஒரு சில உறுப்புக்களில், சதைத்திரள்கள் புகைந்துகொண்டிருந்தன.