பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

157

தொட்ட இடத்திலெல்லாம், அவர்கள் கை சுட்டது. பார்த்த இடத்திலெல்லாம் பாளம் பாளமான கருப்பு. மேடுகள்; பொசுக்கல் காடுகள்.

கலாவதியின் உடம்பில், தனது மேல் துண்டை எடுத்துப் போட்ட பேச்சிமுத்து, அவளைத் தூக்கி, தன் தோளில் போட்டுக் கொண்டார். வீரபத்திரனைப் பார்த்து. “பேய்க்கு வாழ்க்கைப் பட்டால், புளியமரத்தில் ஏறித்தான் ஆகணும். உம் நடடா... ”என்றார்.

கலாவதியைத் தூக்கிக் கொண்டு பேச்சிமுத்துவும், வீரபத்திரனும் சுடுகாட்டுப் பக்கம் போனபோது, நரிகள் ஊளையிட்டன; ஆந்தைகள் ஓலமிட்டன; அண்டங்காக்கைகள் வட்டமடித்தன. சாகாத பிணத்தை வழி மறிக்க, அவை ஆயத்தம் செய்தன.

சரல்மேட்டில் நின்றபடி சுடுகாட்டைப் பார்த்த முத்துலிங்கம், கிணற்றை ஒரு தடவை பார்த்துவிட்டு, கமலைக் கிடங்கிற்கு வந்து, கையாட்களுடன் சேர்ந்து கொண்டார். ஒவ்வொருவரும், நடந்ததையும், நடக்கப் போவதையும், தத்தம் மனோபாவத்திற்கு ஏற்றபடி மனதுக்குள் கற்பனை செய்து, கண்களை ஆட்டாமல், கல்லாய் சமைந்தார்கள். அரை மணி நேரம் இடைவெளிக்கு ஒரு தடவை, ஒவ்வொருவராக, ஊரைப்பார்த்து நடந்தார்கள்.

இறுதியாக எஞ்சிய முத்துலிங்கம், உடம்பாட எழுந்தார். உயிராட பயந்தார். கிணற்றுக்குள் உயிர் பாய்ச்சிய மாடக்கண்ணு, பேயுருவாகி, அவரையும் கிணற்றுக்குள் தூக்கிப் போடுவதுபோல் ஒரு பிரமை;. கலாவதி வழியிலேயே உயிர்போய், மோகினிப் பிசாசாகி, அவர் முன்னால் பாம்பாய் வந்து, உடம்பைச் சுற்றுவது. போன்ற பயப்பிராந்தி. முத்துலிங்கம் எழுந்தார். கால்கள் தரையில் மடங்கின. சுடுகாட்டு நரிகளின் ஊளே, அவர் ஊனை சில்லிட வைத்தது. ‘எய்யோ...எய்யோ...’ என்று கலாவதி, காதில் கத்திக் கொண்டிருந்தாள்.