பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுத்திரம்

161

போயிடும். அதைத்தான அய்யா கிட்ட , சொன்னேன், அய்யா அதுக்கு, ரத்தக் காயத்தோட வந்தியானால் ஏதாவது ஆக்ஷன் எடுக்கலாம். சும்மா வந்தால் எப்டிய்யான்னு அய்யா சொல்றார்!”

தாமோதரன், பொன்னுச்சாமியை முறைத்தான். ஐம்பதைத் தாண்டிய அவரை, அதற்கு மேல் முறைக்க அவனுக்கு மனம் வரவில்லை. பக்கத்தில் நின்ற இன்னொரு போலீஸ்காரரைப் பார்த்து, “நீங்க அவரோட போங்க. இப்போ நாட்ல தம்பிக்கு முதல் விரோதியே இந்த அண்ணங்கதாய்யா” என்று சொல்லியபடியே, மீண்டும் தன் அறைக்குள் போனான். சிறிதுநேர இடைவெளிக்குப் பிறகு, “மிஸ்டர் பொன்னுச்சாமி! கொஞ்சம் வந்துட்டுப் போ நீங்களா!”' என்றான், வினயமாக.

தாமோதரன் கூப்பிட்டு முடிக்கும் முன்னாலேயே, ஏட்டு பொன்னுச்சாமி, அவன் முன்னால் சலூட் அடித்தபடி நின்றார்.

தாமோதரன் நிதானமாகக் கேட்டான்: “ஒங்களுக்கு எத்தனை வருஷம் சர்வீஸ் ஆகுது சார்?”

அவர் “நீ பிறக்கு முன்னாலயே சர்வீஸ்ல சேர்ந்துட்டேன்” என்று மனதுக்குள் சொல்லியபடியே, தாமோதரனை பயப்பட்டுப் பார்ப்பவர்போல், பாவலா செய்தார். தாமோதரன் நிதானம் இழக்காமல் கேட்டான்:

“சாந்தமாய் பேசுறதுனால நான் கோபப்படலன்னு அர்த்தமில்ல. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.”

“முப்பது வருஷம் சார்.”

“போலீஸ்காரன் டூட்டி, குற்றத்திற்கு ஆக்ஷன் எடுக்கிறது மட்டுமில்ல; குற்றம் ஏற்படாமல் தடுக்கிறதுலயும் இருக்கு. இத்தனை வருஷத்துல இதுகூடவா ஒங்களுக்குத் தெரியல? ரத்தக் காயத்தை சாட்சியா கேட்கிறீங்களாம்.”

நெ—11