பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

163

சலூட்டை அடித்துவிட்டு, வெளியேறினார். தனக்குள்ளே கருவிக்கொண்டார். ‘பொதுமக்களில் ஒருவர் மேல் ஒரு அநியாயம் நடந்தால், அதுக்குக் காரணமான டிபார்ட்மெண்ட் ஆளைக் காட்டிக் கொடுப்பது, டிபார்ட்மெண்டை காட்டிக் கொடுப்பதாய் ஆகாது. ஆகக்கூடாது’ என்று பேசுகிற இவன் கிட்ட என்ன பேச்சு? இருக்கவே இருக்கார் இன்ஸ்பெக்டர் அய்யா.

பொன்னுச்சாமி அகன்றார்.

தாமோதரன், தன் சிந்தனைச் சிறைக்குள், தன்னைத் தானே கைது செய்து காவலிட்டான். வேலைப்பளுவால் ஊர் நிகழ்ச்சிகளை சிறிது நேரம் மறந்திருந்த அவன் மனதுள், வெற்றிடத்தில் வெள்ளம் புகுவதுபோல், ஊரின் நிகழ்ச்சி சுமை, சகோதரச் சுமையாக, அவமானச் சுமையாக, கையாலாகாச் சுமையாக, காதல் சுமையாக அழுத்தின. இறுதியில் எல்லாச் சுமைகளும், மனதின் அதலபாதாளத்திற்குள் ஆழமாய் மூழ்க, மன மேல் மட்டத்தில் காதல் சுமை மட்டும் மிதந்தது. சுவையாக இருக்க வேண்டியது சுமையாக, அவன் மனப்பாரம் தாங்க முடியாமல், தலையை ஆட்டினான். தனக்குள்ளேயே முனங்கிக் கொண்டான். தமிழரசியைப் பார்த்து, இரண்டு நாட்கள் தான் கடந்திருக்கின்றன என்றாலும், அந்த ஒவ்வொரு நாளும், வருடமாய் வடிவெடுத்தது. அவளை எப்போது பார்ப்போமோ என்று நினைத்தபடியே மேஜைப் பரப்பில், பேப்பர் வெயிட்டை உருட்டினான். அது, அவன் கையை விட்டுக் கீழே விழுந்தது. இதே இந்த காவல் நிலையத்திலும், தான் வேலை பார்த்த இதர காவல் நிலையங்களிலும், எத்தனையோ காதல் ஜோடிகள், “விவகாரமாகும் போது” அவர்கள் ‘விவாகம்’ முடிக்கக் காரணமான அவன், இப்போது தனது காதலும், ஒரு ‘லா அண்ட் ஆர்டர்’ பிரச்சனையாகி விட்டதில், கை கால்கள், அராஜகமாக, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.