பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

165

“தெருவுல நின்று பேசாண்டாம். உள்ளே போவலாம்.”

இருவரும் உள்ளே வந்தார்கள். ஏற்கனவே பரிச்சயமான முத்துலிங்கத்தின் பிதுங்கிய விழிகளையும், கூம்பிய முகத்தையும் பார்த்துவிட்டு எல்லாப் போலீஸ்காரர்களும் ஆச்சரியப்பட்டார்கள். முத்துலிங்கம், தாமோதரன் காட்டிய நாற்காலியில் உட்கார்ந்தார்.

“என்னண்ணா திடீர்னு?”

“வினை தீர்த்தானை எப்படியாவது கண்டு பிடிக்கணுமுன்னு நினைச்சு, மாடக்கண்ணுவையும், கலாவதியையும், நம்ம தோட்டத்துக்குக் கொண்டு போனேன். மாடக்கண்ணுவை, லேசா ரெண்டு தட்டுத் தட்டுனேன். உடனே அந்தக் கிழட்டுப் பயல் திடீர்னு நம்ம கிணத்துக்குள்ளேயே விழுந்து... செத்...”

தாமோதரன், நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான். முகம் அதிர்ந்தது. விழிகள் வெளுத்தன. நெற்றி புடைத்தது. வாய், பல் தெரிய விரிந்தது. உதடுகள் துடித்தன. அண்ணனையே, அதிர்ச்சியுறப் பார்த்தான். அவர், அவன் பார்வை தாளமாட்டாது, முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார். ஐந்து நிமிடம் வரை அண்ணனையே விழியாடாது பார்த்தவன், சோர்ந்து போய் நாற்காலியின் சட்டத்தில் சாய்ந்தான். இரண்டு நிமிடம் சாய்வாய் கிடந்துவிட்டு, மீண்டும் நிமிர்ந்தான். நாற்காலியின் முனைக்கு, உடம்பை நகர்த்திக் கொண்டபடியே, அனல் கக்கப் பேசினான்:

“ஒங்களுக்கு மூளை இருக்கா? அது இல்லாட்டாலும் பரவாயில்ல, கொஞ்சமாவது ஈவு இறக்கம் வேண்டாமா? நீங்க என்ன பெரிய சினிமா வில்லனா? எதுக்காக அந்த அப்பாவிங்களை தோட்டத்துக்குக் கொண்டு போனீங்க? கேழ்வரகுல நெய் ஒழுகுதுண்ணு நீங்க சொன்னால், நான் நம்பணுமா? மாடக் கண்ணு மாமா, சும்மா கிணத்துக்-