பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

நெருப்புத் தடயங்கள்

குள்ள விழுந்திருக்க முடியாது. என்னெல்லாம் செய்தீங்க? சொல்லுங்க!”

முத்துலிங்கம், அவனைப் பார்க்காமல், சுவரைப் பார்த்தார். பிறகு, வலுக்கட்டாயமாக வார்த்தைகளை வரவழைத்தார்.

“என்னால இப்போ எதுவுமே பேச முடியல, வேற வழியில்லாமல் தான் ஒன்கிட்ட வந்திருக்கேன், போலீஸ் என்னை துரத்துது. ஊர்ல இப்போ என்ன நடக்குதோ? நம்ம அப்பாவை என்ன பண்ணுறாங்களோ? ஒன் அண்ணியை என்ன பண்ணுறாங்களோ?”

“இந்தப் புத்தி மொதல்லே இருந்திருக்கணும்.”

“நீயும் உதறிட்டால், நான் கன்னியாகுமரி கடலுல விழவேண்டியதுதான்.”

“அப்படிச் செய்யாதீங்க. நீங்க செய்திருக்கிற பாவம், மூன்று கடலுலயும் ஒட்டி... புனித நீராடுறவங்களையும் பிடித்துக்கிடும்... மாடக்கண்ணு விழுந்த கிணத்துலயே போய் விழுங்க. சீ!”

ரைட்டர், தன் இருக்கையில் இருந்து எழுந்தார். தாமோதரன் அறைக்குள், உரிமையோடு நுழைந்தார்.

“என்னோட இன்டர்பியரன்ஸை தப்பா நினைக்கப் படாது. ஒங்கண்ணா இப்போ பேசுற நிலையில இல்ல. ஆயிரம் செய்தாலும் அவரு ஒங்களுக்கு அண்ணா. எதுக்கும் அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு டிரங்கால் போட்டு, மொதல்ல லேட்டஸ்ட் சுட்சுவேஷனைக் கேளுங்க சார்.”

தாமோதரன் பதிலளிக்கவில்லை. அதை சம்மதமாக எடுத்துக் கொண்டு, ரைட்டர் ‘கால்’ போட்டார். டயலைச் சுழற்றினார். ஒரு நம்பர் உருண்ட உடனேயே ‘ஒய்ங்’ என்ற சத்தம். “இந்தக் காலத்துல பிளட்பிரஷ்ஷர் வருறதுக்கு இந்த டெலிபோனும் ஒரு காரணம்” என்று