பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

நெருப்புத் தடயங்கள்

காரனைக்கூட தொடாதவன் நான். இதுவரைக்கும் நயா பைசா வாங்காமல் யோக்கியமாய் வேலை பார்க்கிறவன். இப்படிப்பட்ட எனக்கு நீ அண்ணன்! சீச்சீ... தமிழரசிகிட்டே என்னை தலை குனியவச்சே! பொறுத்துக்கிட்டேன். என்னைக் காட்டி இது வரைக்கும் ஏழை பாழைகளை மிரட்டிக்கிட்டு இருந்தே. பொறுத்துக்கிட்டேன். ஆனால் இதைப் பொறுக்கமாட்டேன். என்னோட டூட்டி, ஒன்னை கைது செய்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் கிட்ட ஒப்படைக்கணும். ஏனோ மனசு கேட்க மாட்டக்கு, என் மனசு கல்லாகு முன்னால், இங்கே இருந்து ஓடிடு. கெட் அவுட். ரைட்டர் இந்த ஆளைப் பிடித்து வெளில தள்ளுங்க. இவரு எனக்கு அண்ணனும் இல்ல. நான் அவருக்கு தம்பியும் இல்ல”

முத்துலிங்கம் எழுந்தார். கண்களைத் துண்டால் துடைத்தபடி, தழுதழுத்த குரலில், படபடக்கப் பேசினார்:

“எப்போ ஒனக்கு நான் அண்ணன் இல்லன்னு சொன்னீயோ, அப்பவே எனக்கு தூக்குத் தண்டனை சின்னதாய் போயிட்டு. என்னால ஒனக்கு எந்தத் தொந்தரவும் வராது. நான் எப்படியாவது தொலைஞ்சு போறேன். கூடப்பிறந்த ஒரே ஒரு பாவத்துக்காக, எப்போவாவது ஊருக்குப் போய்... அண்ணியையும் பிள்ளைங்களையும் கவனிச்சுக்கோ. அடுத்த பிறவியிலயாவது நான் ஒனக்கு அண்ணனாய் பிறக்கப்படாதுன்னு கடவுளை வேண்டிக்கோ. சத்தியமாய் ஒன்மேல் எனக்குக் கோபம் இல்ல. நான் வாரேன்.”

முத்துலிங்கம், நின்ற இடத்திலேயே சிறிது நேரம் நின்று, தாமோதரனை இனிமேல் பார்க்கப் போகாதவர் போல் பார்த்தார். பிறகு மெள்ள அடியெடுத்து-அப்புறம் வேக வேகமாய் நடந்தார்.

தாமோதரன், தொப்பென்று நாற்காலியில் விழுந்தான். போகிற அண்ணனையே, பாச மயக்கத்தில் பார்த்-