பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

169

தான். கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டல் பீஸ் கொண்டு வந்து, தன்னை ‘தம்பி... தம்பி...’ என்று தலையில் தூக்கி வைத்து ஆடாத குறையாக ஆடிய அண்ணன்; ‘ஒங்க தம்பியை... இவ்வளவு ரூபாய் செலவழித்து எதுக்காக படிக்க வைக்கணும்...’ என்று அடிக்கடி நச்சரிப்பு செய்த அண்ணியை அடிக்கப்போன அண்ணன்; சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்ததும், தன்னைக் கட்டியணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டவன். ‘பெரியவங்க பழக்கத்தால, இந்த சின்னவனை மறந்துட மாட்டியேடா...’ என்று கேட்டவன். ஊருக்குப் போகும்போதெல்லாம், ‘செலவுக்குப் பணம் வேணுமாடா’ என்று இப்போகூட கேட்டவன், இவன் உள்ளே போய், நான் வெளியில் இருக்கணுமா? இவனை தற்கொலை செய்ய விட்டுவிட்டு, நான் உடம்பை வைத்துக் கொண்டு இருக்கணுமா?

‘அண்ணா ... அண்ணா’ என்று கூப்பிடப்போனான். அவனையே பார்த்த ரைட்டரைப் பரிதாபமாகப் பார்த்தான். ரைட்டர் புரிந்து கொண்டார். வெளியே ஓடி, முத்துலிங்கத்தின் கையைப் பிடித்தார். அவர் உதறப் போனார். உடனே முத்துலிங்கத்தை, பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு, ரைட்டர் உள்ளே வந்தார். தாமோதரன் அறைக்குள், பக்கவாட்டில் போட்டிருந்த ஒரு ‘பெஞ்சில்’ போட்டார்.

அரைமணிநேரம் சகோதரர்கள் மூச்சு மட்டுமே விட்டார்கள். பிறகு தான் தம்பிக்காரனுக்குப் பிரக்ஞை வந்தது.

தாமோதரன், அண்ணனைப் பார்த்து ‘சாப்பிட்டியா’ என்றான். அப்படிச் சொல்லி முடிப்பதற்குள், அவன் வாய், கண்ணீரைச் சாப்பிட்டது. இதுவரை பதுங்கியபடி இருந்த போலீஸ் பொன்னுச்சாமி, தாமோதரனுக்கு விறைப்பாய் ஒரு சலூட்டை அடித்தபடியே, பேச்சை பணிவாய் துவக்கி, துணிவாய் முடித்தார்.