பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

நெருப்புத் தடயங்கள்

“முந்திரிக் கொட்டை மாதிரி பேசுறேன்னு நினைக்காதிங்க சார். கொலையோ தற்கொலையோ, நடந்தது நடந்து போச்சு. நடந்ததை மாற்ற முடியாது. நடக்கப் போறதையாவது மாற்றலாம். ஒங்க அண்ணாவை இப்போ நீங்க கை விட்டுட்டால், அப்புறம் நீங்கதான் காலமெல்லாம் நிம்மதியில்லாமல் தவிப்பீங்க. தனக்குப் போகத்தான் தானம். தமையனுக்குப் பிறகு தான் தர்மம். பார்க்க வேண்டிய ஆட்களைப் பார்த்து, முடிக்க வேண்டிய காரியத்தை முடியுங்கள். நாகர்கோவிலுல ஒங்களுக்கு வேண்டிய பெரிய போலீஸ் அதிகாரி .. அது தான் ‘அவரு’ வந்திருக்காரு. போய்ப் பாருங்க சார், அண்ணாவ வாழ வைக்காட்டாலும், சாக வைக்காமலாவது பார்த்துக்கங்க சார்; என்ன யோசிக்கிறீங்க? ஒங்களால இப்போ மோட்டார் பைக்ல... போக முடியாது. நானே காருக்கு ஏற்பாடு செய்யுறேன்.”

கால்மணி நேரத்திற்குள் படகுக் கார் ஒன்று வந்து நின்றது. தாமோதரன் மவுனமாக எழுந்து முத்துலிங்கத்தைப் பார்த்தான். அவரும் எழுந்து பொன்னுச்சாமியைப் பார்த்தார். ரைட்டர், தாமுவைப் பார்த்துக் கண்ணடித்தார். இருமிக் காட்டினார். அவன், அவனைப் பார்க்கவில்லை. கேட்கவில்லை.

படகுக் காருக்குள், மூவரும் ஏறினார்கள். தாமோதரன் குனிந்த தலை நிமிராமல் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தான். போலீஸ்காரர் பொன்னுச்சாமி, டிரைவர் முதுகைத் தட்டவும் கார் சிட்டாய் பறந்தது.

போகிற காரையே, மனம் புகைக்கப் பார்த்த ரைட்டர், திடீரென்று முழங்காலிட்டு, கண்களை மூடி, தலையை லேசாய் உயர்த்தி, பிரார்த்தித்தார்.

“ஆண்டவரே! இந்தக் கார், எந்த எஸ்டேட்ல ஒரு தொழிலாளி தூக்குல தொங்குனானோ, அந்த எஸ்டேட் முதலாளியோட கார் என்பதும், அந்தக் காரை அந்த