பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

173

வாங்கி ‘நல்லடக்கம்’ செய்தார். அப்போது ஊரே அழுதது. குற்றவாளிகளை கண்டதுண்டமாய், வெட்டி, காக்காக்களுக்குப் போடவேண்டும் என்று போர்க்கீதம் எழுப்பியது.

என்றாலும் ஊராரின் ஆவேசம் சோடாபாட்டல் ஆவேசம் மாதிரிதான். அதாவது, சோடாவைத் திறந்தால் பெரிதாய் ஏதோ நடக்கப் போவதுபோல் ‘உஷ்’ என்ற சத்தம் வரும். அப்புறம் அதை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். இதுபோல், மூன்று நாட்கள் கொதித்துப்போன ஊரார், படிப்படியாய் ஆறி, பனிக் கட்டியாய் மாறி தத்தம் வேலையை மட்டுமே கவனிக்க முற்பட்டார்கள்.

அதோடு, கலாவதியின் பங்காளிகளில் பெரும்பாலோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். ‘அம்பாசமுத்திரத்திற்கு’ தங்கியிருந்து கதிரறுக்கப் போய் விட்டார்கள். ஆகையால் மாடக்கண்ணுவின் இழவில், கொடுமைக்காக அழுதவர்களே அதிகம். உறவுக்காகக் கொதித்தவர்கள் குறைவு. என்றாலும் சும்மா சொல்லப்படாது, அருணாசலம் “தம்பி... தம்பி” என்று நான்குபேர், ஆறுதலாய் தன்னைப் பிடித்துக் கொள்ளும் வரை அழுதார். அவர் மனைவி, “தர்மத்துரையே... கொழுந்தா” என்று கூப்பாடு போட்டாள். ராஜதுரை துக்கமே உருவானவன் போல், துண்டை எடுத்துத் தலையை மூடியபடியே பிணத்தின் பின்னால் நடந்தான். பிண ஊர்வலம் முத்து லிங்கம் வீட்டை நெருங்கியபோது கில்லாடியார் “மொதல்ல இவன் வீட்டை நொறுக்கணும்பா” என்று மண்டையனிடம் பேசினார். ஆனால், ராஜதுரையோ யார் செத்தாலும் காதல் சாகாது என்பது போல், விஜயா தென்படுகிறாளா, தான் சோகமாக இருப்பதைப் பார்த்து, சோகப்படுகிறாளா என்று கண்களை சோதனைப் பார்வையில் விட்டான்.