பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

நெருப்புத் தடயங்கள்

மாடக்கண்ணு புதைக்கப்படுவதற்கு முன்பாகவே போலீசார், முத்துலிங்கத்தின் மிச்சம் மீதி கையாட்களையும் கைப்பற்றி காவலில் வைத்தார்கள். இப்போதும் அவர்கள், காவலில் தான் காத்துக் கிடக்கிறார்கள் இந்த விவகாரம் முழுவதையுமே ஊர் மறந்தது போல் தோன்றினாலும் இந்த ஐந்து பேர் குடும்பத்தினரும் மறக்கவில்லை. காவல் நிலையத்திற்குப் போய் தத்தம் குடும்பத்து சாதனையார்களைத் திட்டிவிட்டு அவர்கள் திரும்பும் போதெல்லாம், வீடுகளுக்கு போகும் முன்னாலேயே, முத்துலிங்கத்தின் வீட்டிற்கு முன்னால் போய் நின்று மண்ணை அள்ளி தட்டினார்கள்.

“அடியே கனகம்...கழிசடை... ஒன் புருஷன் மட்டும் வெளில சுத்தணும், எங்க புருஷன்மாரு ஜெயிலுல இருக்கணுமா? வெளில வாடி...முண்டை. ஒன் புருஷன் இருக்கிற இடத்த சொல்லுடி. அந்த தடிப்பயல ... கொலைகாரப் பயல... எங்கேடி ஒளிச்சி வச்சிருக்கே? சொல்லுடி, வாடி வெளியே” என்று அவர்கள் போடும், கண்மண் கலந்த கூப்பாடு, அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. ஊரார் யாரும் இதைத் தடுக்கவில்லை. ஒரு தடவை கூனிக்குறுகி வயலுக்குப் போகப்போன, முத்துலிங்கத்தின் தந்தையை, சில பெண்களும், ஆண்களும், அவர்களின் பிள்ளை குட்டி களும் வழிமறித்து “ஒன் மகன் இருக்கிற இடத்த சொல்லாமல் ...கிழட்டுப் பயலே ...நீ இப்போ ஒரு அடி கூட நகர முடியாது..” என்றார்கள்.

கிழவர்“ சத்தியமாய் எனக்குத் தெரியாது” என்றார். மாமனாரை மீட்டு வந்த, முத்துலிங்கத்தின் மனைவி, கூட்டத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடியே “அந்த கரிமுடிவான்... நாசமாப் போற பாவி ... இப்படிச் செய்வான்னு நாங்க நினைக்கல... அவன் தங்கச்சி எங்க வீட்ல இருந்தும் கெடுத்தாள். இல்லாமலும் கெடுத்தாள். சத்தியமாய் அந்த குடிகாரன் போன இடம் எங்களுக்குத் தெரியாது. இவர விட்டுடுங்க...” என்று, கலாவதி,