பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

நெருப்புத் தடயங்கள்

அடக்கப்பட்டு விட்டன என்பதைப் புரிந்து கொண்ட ஊரார், யாரும் அடக்காமலே அடங்கி விட்டார்கள்.

என்றாலும்—

தாமோதரன் முயற்சியால், பெருமளவு சரிக்கட்டப்பட்ட இந்த விவகாரத்தை, சட்டப்படி சரிக்கட்டவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. பிரேத பரிசோதனை. ரிப்போர்ட் இன்னும் பூர்த்தியாகவில்லை. எப், ஐ. ஆர். நீக்குப்போக்காக நிரப்பப்பட்டுள்ளது. கலாவதிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ‘பாஸிட்டிவ்’ மனிதாபிமானத்துடனும், ‘டிபார்ட்மென்ட் மேன்’ குடும்பத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற ‘நெகட்டிவ்’ மனிதாபிமானத்துடனும் முழுப் பூசணிக்காயை, தன்னந்தனியாய் தாங்கள் மட்டுமே மறைக்கக் கூடாது என்ற ராஜதந்திரத்துடனும், காவல் நிலையத்தினர், தங்களிடம் தவம் கிடக்கும் லோகல் லீடர்களிடம், ஒரு யோசனை சொன்னார்கள்; அது தான் பஞ்சாயத்தார் தீர்ப்பு—

இதன்படி, ஊர்ச்சாவடி முகப்பில் கூட்டம் நிரம்பியிருக்கிறது. உள்ளூர் பிரமுகர்களும், வெளியூர் பிரமுகர் களும், சாவடிக்குள் விரிக்கப்பட்ட ‘கோரம்பாய்களில்’ உட்கார்ந்திருக்கிறார்கள். பிள்ளையார் கோயில் தர்ம கர்த்தா சோமசுந்தரம், அந்த ஏரியாவின் பாதிரியார், சர்வகட்சி லோகல் தலைவர்கள், ஒருவர் உடம்பை ஒருவர் இடிக்கும்படி, வெற்றிலை பாக்கைப் போட்டுப் போட்டு, துப்பித் துப்பி, பேசிப் பேசி, அந்த விவகாரத்தை மூடுமந்திரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாவடி முகப்புக்கு வெளியே, கில்லாடியார், மண்டையன் உட்பட வாயாடிகள் முன்னாலும் வாய் செத்தவர்கள் பின்னாலு மாய் இருக்கிறார்கள். கூட்டத்தின் விளிம்பு போல, லாக்கப்பில் இருக்கும் ஐவரின் தேவியரும் அவர் தம் பிள்ளை பெண்டுகளும், பிரமுகர்களையே பரிதாபமாகப் பார்த்த படி, ஏங்கிய முகங்களோடு, தொங்கிய கோலத்தோடு,