பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

177

காட்சி தருகிறார்கள். சற்றுத் தொலைவில் கசா.முசா சத்தத் துடன் பெண்கள் கூட்டம். கூட்டத்திற்கு வலது பக்கம், பாதிரியாரின் மோட்டார் பைக். இடது பக்கம், தாகர் கோவிலைச் சேர்ந்த அதே அந்த படகுக்கார்.

எல்லாவற்றிற்கும் மேலாக—

பிரமுகர்களின் வட்டத்திற்கு மையமாக கலாவதி உட்கார்ந்திருந்தாள், இல்லை... உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தாள். அன்று தான் அவளை, அவசர அவசரமாக, அரையும் குறையுமாக, மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்தார்கள். அம்மணமாகப் போனவள், இப்போது புத்தம் புது சேலையோடு, கண்ணைப் பறிக்கும் வண்ண ஜாக்கெட்டோடு இருக்கிறாள்.

என்னதான் அவள் உடம்பைப் பூசி மெழுகினாலும், உடம்பில் சூடுபட்ட பல பகுதிகளைப் பார்க்க முடியவில்லையானாலும், அவள் கண் விழிக்குக் கீழே இருந்த வெள்ளை வெளேர் தோலையும், நெற்றிப் பொட்டில் பத்துப் பைசா அளவிற்கு இருந்த புண்பட்ட பொத்தலையும் யாராலும் மறைக்க முடியவில்லை. இவை மட்டுமா? உதடுகள் வெள்ளையாய் வெந்திருந்தன. கழுத்தில் இரும்பு நெக்லஸ் போட்டதுபோல், ‘சூட்டாரம்’. தொண்டையில் சாம்பல் நிறக் குழி. கை கால்களிலும், பார்ப்பவர் கண்ணுக்குப் புலப்பட்ட அத்தனை அங்கப் பகுதிகளிலும் தோலுரிக்கப்பட்டது போன்ற சதைத் திரட்டுக்கள். இந்த புண்பட்ட பெண்ணிற்கு மகுடம் சூட்டுவதுபோல், தலை மொட்டையடிக்கப்பட்டு, அதில் களிம்பு போடப்பட்டிருந்தது.

கலாவதி, மலங்க மலங்க, விழிகள் பிதுங்கப் பிதுங்கப் பார்த்துக் கொண்டாள். ஒரு தடவை தன்னையும், மறு தடவை சூடுபட்ட தோட்டம் இருந்த திக்கையும் பார்த்துக் கொண்டாள். உடம்பை ஒடிக்காமல், தலை மட்டும் தனியாய் இருப்பது போல் பார்த்தாள். பிறகு