பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

நெருப்புத் தடயங்கள்

“எய்யோ ... யோ ... யோ...” என்று தன்பாட்டுக்கு இழுத்தபடியே மெள்ளப் புலம்பினாள். அருகே தலை கவிழ்ந்து இருந்த தாமோதரனையும், தலை நிமிர்ந்து இருந்த அவன் தந்தையையும் பார்த்துப் பயந்தவள்போல், சற்று விலகிப் போனாள். உட்கார்ந்து களைத்தவள் போல் படுக்கப் போனாள். மொத்தத்தில் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வோ, யாருடன் இருக்கிறோம் என்ற ஒளிவோ இல்லாமல், ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது மாதிரி இருந்தாள்.

“நாசமா போற பயலுவ! அச்சடிச்சது மாதிரி இருந்த பொண்ண, அடையாளம் தெரியாமல் பண்ணிட்டாங்களா. இவங்க மட்டும் வாழ்ந்திடுவாங்களாக்கும்” என்று தொலைவில் நின்ற தாய்மார்கள், சத்தம் போட்டே பேசினார்கள். முத்துலிங்கம் வீட்டில் காவலுக்குப் போட்டிருந்த போலீசார், இப்போது கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தபடியே, தங்களை உற்றுக் கவனிப்பதைப் பொருட்படுத்தாமலே பேசினார்கள். முத்துமாரிப் பாட்டி, கையில் கற்களையும், தோளில் வாதமடக்கி இலைகளையும் வைத்தபடி, அந்தப் பக்கமாய் போய் தலையை ஆட்டினாலும், அவளைக் கிண்டல் செய்யவேண்டும் என்ற வழக்கமான உணர்வற்று வைதுகொண்டிருந்தார்கள். தாமோதரனுக்கும் திட்டு; அவன் தகப்பனுக்கும் திட்டு; நீதிக்கும் திட்டு; சாமிக்கும் திட்டு.

தாமோதரன், தலை கவிழ்ந்தபடியே தன் கண்களை தோளில் வைத்து தேய்த்துக் கொண்டான். கலாலதியைப் பார்க்கப் பார்க்க, அவன் பார்வை இழந்தான், மண்ணுலகு இல்லாத விண்ணுலகில், மனிதர்கள் இல்லாத பொன்னுலகில், தமிழரசி மனிதப் பெண் என்பதால் அவளையும் சேர்க்காமல், தான் மட்டும் தன்னந்தனியாய் சஞ்சரிப்பது போல் தோன்றினான். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்ட விரக்தியில், உள்ளமே அற்றுப் போனவன் போல் உட்கார்ந்து கிடந்தான்.