பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

181

அருணாசலம் எகிறினார்.

“இது என்ன, விலை பேசுற விவகாரமா?”

“சரிப்பா, ஒரே பேச்சு! கலாவதியை கட்டிக் காப்பாத்துறதுக்காக, அருணாசலம் கையில, கூட இரண்டாரயிரம் போட்டு, ஏழாயிரமாய் கொடுத்துடணும்.”

அருணாசலம், பெரிய மனிதர்கள் பேச்சை தட்ட முடியாதவர்போல், ஏதோ ஒரு மனக்கணக்கைப் போட்டுக் கொண்டு இருந்தார். தாமோதரனின் தந்தை ராமையா மடிக்குள் இருந்து, நூறு ரூபாய் நோட்டுக்களாக எடுத்து எண்ணி, அருணாசலத்திடம் பயபக்தியுடன் கொடுத்தார்.

“எல்லாம் முன்னேற்பாடோட நடக்குதுடா...” என்று மண்டையனிடம், ரகசியமாய் முணுமுணுத்த கில்லாடியார், ‘கலாவதிக்கு சம்மதமா’ன்னு ஒரு வார்த்தை கேளுங்க” என்றார். உடனே தர்மகர்த்தா, அதர்மமான ஒரு ஆபாச வார்த்தையால் கில்லாடியாரை மனதுக்குள்ளேயே திட்டியபடி “கலாவதி, ஒனக்கு இது சம்மதத்தானே? சொல்லும்மா!” என்றார்.

கலாவதியோ, தன் கையைத் தொட்ட தர்மகர்த்தாவை, சூடு போடப் போகிறவர்போல் பார்த்தபடியே “வேண்டாம் மச்சான், வேண்டாம் மச்சான். அவன் நொறுங்குவான், கூடப்பிறந்த குற்றத்த தவிர, எந்தக் குற்றத்தையும் அறியாதவள் நான்” என்று சொல்லிவிட்டு, அப்படிச் சொன்னதை மறந்தவள்போல் “எய்யோ... ஓ...யோ...” என்று வாயை இழுத்தாள்.

முன்னுரை சொன்ன லோகல் லீடரே, இப்போது முடிவுரையும் சொன்னார்:

“எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க. மகன் வினை தீர்த்தான் இன்னொருத்தன் பொண்ணோட ஓடிப்போன அவமானம் தாங்காமல், மாடக்கண்ணு கிணத்துல விழுந்து தற்கொலை செய்து கிட்டார். அவருக்கு நீச்சல்