பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

நெருப்புத் தடயங்கள்

தெரியும். அதனால, கையைக் காலைக் கட்டிக்கிட்டு கிணத் துல குதிச்சார். இதுதான் பஞ்சாயத்தார் தீர்ப்பு, யாராவது ஏதாவது சொல்லணுமுன்னால் இப்பவே சொல்லுங்க .”

கில்லாடியார் கிள்ளுவது பொறுக்க முடியாமல், மண்டையன் கேட்டான்:

“பக்கத்துல எத்தனையோ கிணறுங்க இருக்கும் போது, மாடக்கண்ணு ஏன் முத்துலிங்கம் கிணத்துல விழணும்? இதை நானா கேட்கல? போலீஸ் கேட்குமேன்னு கேட்கிறேன்.”

“அதுவா? மாடக்கண்ணு மானஸ்தர். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த மவனுக்கு பாடஞ் சொல்ல நினைச்சார். “அடேய் நீ எவன் வீட்டுப் பெண்ண கூட்டிக்கிட்டுப் போனீயோ, அவன் வீட்டு கிணத்துலயே விழுந்து நான் சாகுறேண்டா...சண்டாளா”ன்னு வாயால் சொல்லாமல், செய்கையில் காட்டிட்டார். அவ்வளவுதான்.”

“அப்புறம், கலாவதி சூடுபட்ட சமாச்சாரம்?”

“அது போலீஸ் கணக்குல வராது. இந்தாப்பா மொய்தீன், பஞ்சாயத்தார் தீர்ப்பை எழுது. சட்டுப் புட்டுன்னு கையெழுத்து வாங்கலாம்.”

எத்தனையோ பஞ்சாயத்தார் தீர்ப்புக்களை எழுதிப் பழக்கப்பட்ட லோகல் அரசியல்வாதியான மொய்தீன், தாமோதரன் தந்தையின் காதில் “இன்னும் ரெண்டாயிரம் ரூபாய் எடுத்துக்கங்க; போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சாயத்தார் தீர்ப்போட போகணும்” என்றார். உடனே அவர் “நான் அழ வேண்டியத அழுதாச்சு. மிச்சம் மீதியை கையாள் பயலுவகிட்ட வாங்குங்க. அந்தப் பயலுவதான், என் மகனைக் கெடுத்தது” என்றார்.

இந்தச் சமயத்தில் வாயால் கெட்ட பூணிக் குருவி மாதிரி லாக்கப்வாசி பேச்சிமுத்துவின் இரண்டாவது