பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

நெருப்புத் தடயங்கள்

தாமோதரன் தங்கை விஜயாவுக்கும் நடக்கறதாய் இருந்த கல்யாணம் நின்னுட்டதாய் கேள்விப்பட்டேன். கல்யாணம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுறது. அதை நாம் தடுக்கப் படாது. அருணாசலம் என்ன சொல்றீங்க? ராமையா, சொல்லும்!”

“அவருக்குச் சம்மதமுன்னால், எனக்கும் சம்மதம்.”

“எனக்கும் சம்மதந்தான்.”

அருணாசலமும் தாமோதரன் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பிரமுகர்கள், “பேஷ் பேஷ்” என்று சொல்லிக் கொண்டார்கள், கலாவதி “எய்யோ...” என்று கத்திக் கொண்டாள்.

கம்பீரம் கலைந்துபோன தாமோதரன், எஸ்டேட் முதலாளி இருந்த படகுக்காரை நோக்கி, நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்தான்.

18

சென்னை நகர மக்களுக்கு, ‘குடி’ வாசத்தலமாகவும், ஆந்திர மக்களுக்கு வழிபாட்டு திருத்தலமாகவும் விளங்கும் காசமுகமலை அடிவாரம். இயற்கையன்னை எழிலாய் வடிவெடுத்து, தாயினும் சாலப்பரிந்து. பாலூட்டுவது போல், பச்சைப் பசேலென்ற பாறையின் மேல்மகுடத்தில் இருந்து, எம்பிக்குதித்து, வெள்ளை வெளேரென்று அருவி நீரை கொட்ட வைக்கும் அழகுப் பகுதி. குற்றாலம் அருவியைப் போல் பெரிதாகவும் இல்லை. அதைப்போல் சில சமயம் அம்போவென்று கைவிடாத சிற்றருவி. வானம் பொய்த்தாலும், இயற்கையின் அந்த இடத்து தானம் பொய்த்ததில்லை. வறட்சிக்கு இடம் கொடுக்காத புனித நீரோட்டம்.