பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

185

மூன்று பக்கமும் மலைவளைய, முன்பக்கம் நீர் பொழிய, மாணிக்கவாசகர் காட்டும் தாவர சங்கமத்தின் பிரதிமை போல் தோற்றம் காட்டும் கோனைப் பகுதியில், அருவியை அடுத்த குகையில், பிரபஞ்சவெளியை கோடுபோட்டுக் காட்டுவதுபோல் காட்சியளிக்கும் லிங்கம். காலையிலேயே வந்து லிங்கத்தை அலங்கரித்த அர்ச்சகர், அருவிகளில் குளித்துக் கொண்டிருப்பவர்கள் கோவிலுக்கு, ‘தரிசனம்’ கொடுத்தாலும் கொடுக்கலாம் என்று நினைத்து, அவர்களையே அவ்வப்போது பார்த்துக் கொண்டார்.

குளித்துக் கொண்டிருந்தவர்களில் பலர், குடித்துக் கொண்டிருக்கப் போய்விட்டார்கள். எஞ்சிய ஆண்களும் வெளியேறுவதற்காக காத்திருந்த இளம் பெண்கள் கூட்டம், அவர்கள் வெளியேற மாட்டார்கள் என்று நினைத்து, அவர்களை வெளியேற்றிக் காட்டுவதற்காக, கூவியபடியே அருவிக்குள் ஓடியது. சென்னை நகரில், ஒரு நாள் விட்டு மறு நாளே தண்ணீருடன் பரிச்சயம் கொள்ளும் அந்தப் பெண்கள், பாய்ந்தார்கள். தலையை விரித்துப் போட்டு தண்ணீரை வாங்கிக் கொண்ட ஒருத்தி, ஆனந்தம் தாங்க முடியாமல் “இந்த அருவியை மெட்ராசுக்கு தூக்கிட்டு போயிடுவோமாடி” என்றாள். உடனே இன்னொருத்தி “ஓ. கே. நீ என்ன செய்யுறேன்னா, இந்த மலையைத் தூக்கி என் தலையில வைப்பியாம். நான் தூக்கிக்கிட்டு வருவேனாம்” என்றாள், உடனே, வளையொலி சிணுங்க கைதட்டியது பெண்கள் கூட்டம்; “ஓல்ட் ஜோக்... ஓல்ட் ஜோக்...” என்று சொல்லவும் ஒருத்தி தவறவில்லை.

பிறகு எல்லோரும் சொல்லிவைத்தது போல், குளியல் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தனித்து, குகையை எதிர்த்தாற்போல் பாறை விளிம்பில் போடப்பட்ட கம்பி மேல் சாய்ந்தபடி நின்றவளைப் பார்த்தார்கள். தலையெங்கும் தண்ணீர் மயமாய், உடலெங்கும் ஒட்டிய ஆடை-