பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

நெருப்புத் தடயங்கள்


மாசம் 'பென்ஷேன்' வாங்கித் தந்த என் ராசாத்திய விட்டுட்டுப் போவ மனம் வர மாட்டக்கே..."

பெண்கள் கைகளைப் பிசைந்தார்கள். வெளியே, பெஞ்சில் ஊர்ப் பெரியவர்களோடு உட்கார்ந்திருந்த கல்யாண மாப்பிள்ளையான தமிழரசியின் அண்ணன் ராஜதுரை, மிடுக்காக அங்கே வந்தான். முத்துமாரிப் பாட்டியின் கையை பலமாகப் பிடித்தபடி "சரி, போதும் பாட்டி, புறப்படு..." என்றான். பாட்டி படபடப்பானாள்.

"கையை விடுடா பேய்ப்பவ மவனே! என்னம்மா வலிக்கு! கல்யாண பந்தலுல, மணவறையில, பொண்ணு கையயும் இப்டி பிடிச்சுடாதல... அப்புறம் பொண்ணு ராத்திரி வரப்படாதுன்னு பகலையே நெனைப்பாள். ஒப்பனும் இப்பிடித்தான். கல்யாணத்துல, ஒம்மா கையை அவன் பிடிச்ச பிடியில, பாவம் அவள் கை வளையலு நொறுங்கி- நொறுங்குனது அவள் கையக் குத்தி, கண்ணாடி சதைக்குள்ள போயி, அப்புறம் நாட்டு வைத்தியர் வந்து, பச்சில கட்டுனாரு, இல்லியா பகவதி?"

மகளை, கதவிடுக்கில் நின்று பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழரசியின் தாய் பகவதியம்மாள், அப்போது தான் அது நடந்தது போல் வெட்கப்பட்டாள். பிறகு, கிழவியின் வாயில் மேலும் விழாமல் இருக்கக் கருதி, "தமிழரசி, வெளில பெரியவங்க ஒனக்காவ காத்திருக்கது தெரியல? அவங்கள போய் விசாரி" என்றாள்.

முத்துமாரிப் பாட்டி, குறுக்கு விசாரணையைத் துவக்கினாள்.

"பகவதி... ஒன்னத்தான்! நம்ம ராஜதுரைக்கு வடக்குத் தெரு ராமையா மகள நிச்சய தாம்பூலம் செய்யப்போறது சரிதான். அதோட அவரு மகன் இனுசு-