பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

நெருப்புத் தடயங்கள்

யோடு நின்ற பெண்களில் சிலர், அவளைப் பார்த்து “மேடம் மேடம்” என்றார்கள். சிலர் “தமிழு... வாயேன்... ஏன் அப்படி பார்க்கிறே?” என்றார்கள்.

தமிழரசி அசையாமல் நின்றாள். முன்னால் தோன்றிய லிங்கத்தையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லையற்ற விண்பரப்பை, கண்ணால் எப்படி வடிவ வரைவு கொள்ள முடியுமோ–அப்படிப்பட்ட வடிவம் காட்டிய லிங்கம் உடலைத் தாண்டும் உயிரையும், உயிரைத் தாண்டும் ஆன்மாவையும், ஊடுருவும் உள்ளொளியாய் எதையோ ஒன்றைச் சொல்லாமல் சொல்லி, காட்டாமல் காட்டிக் கொண்டிருப்பதுபோல், அவளுக்குத் தோன்றியது. முன்பு, கோவில்களை எதிர்ப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போதுகூட, மாணவிகள், ‘மேடம்களுக்கு’ அடிக்கும் சலூட்போல், அனிச்சைவாகவும், ஒரு ஒப்பு மரபுக்காகவும் கரங்குவிக்கும் தமிழரசி, இப்போது கரங்குவிக்கவில்லையானாலும், மனங்குவித்து, அந்த லிங்கத்தையே பார்த்தாள்.

வாழ்க்கை என்ற திடவஸ்துக்கு அப்பாலும், இப்பாலும், அதை ஆட்டிப்படைத்து அபிசேகமாய் ஆக்கிக் கொள்ளும் திரவவெளியும், வாயு வெளியும், எவையும் இல்லாத-பரிசுத்த சூன்ய வெளியும், தன்னைச் சுற்றிச் கொண்டது போன்ற பிரமைக்குள் சிக்கியிருந்தாள். குடி மயக்கம் தீராமலே குளித்து முடித்த ஒருவர் நீட்டிய கற்பூரத்தை, அர்ச்சகர், ஒளிமயமாக்கியபோது, அவள் காதில், வள்ளலார் பாடிய ‘செம்பொருளான சிவமே’ என்ற பக்தி வரியும், அந்த வடலூர் ஜோதி, ‘அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை’ என்று பாட்டுக்குப் பாட்டாய், பாடிய தேடல் வரிகளும், அவள் காதில் ஒலித்தன.

குளித்துக் கொண்டிருந்த பெண்கள் ‘மேடம்... மேடம்...’ என்றும், பலர் ‘தமிழு... தமிழு’ என்றும் இரு-