பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

187

வேறுபட்டு எழுப்பிய ஒலிவகைகள், “மேடம் தமிழ் “தமிழ் மேடம்”” என்று ஒரே ஒருவகை ஒலியாய் எழுந்த போது, தமிழரசி தோள்களைக் குலுக்கி, புருவத்தை நிமிர்த்தி, மோனம் கலைத்து, அரைக்கண் பார்வையை முழுதாக்கி, அவர்களின் ஒன்றித்த பார்வையை சந்தித்ததால், அவசர அவசரமாய் அருவிக்குள் ஓடினாள். பெண்களோடு பெண்ணாய் நின்று கொண்டாள். உடம்பையும், உணர்வையும் இனிமையாய் சுண்டியிழுக்கும் அருவிதரும் சுகத்தை அறியாமலே, நீர்ச் சுமையை சுமப்பதுபோல் நின்றாள் தமிழரசி. தன்னை மறக்க முடியாத தர்ம சங்கடத்தில் நின்றாளென்றால், இதரப் பெண்களுக்கு இன்னொரு வகையில சங்கடமான தர்மம்.

அங்கே குளிக்கும் எல்லாப் பெண்களும், கல்லூரிகளிலும், மேல் நிலைப்பள்ளிகளிலும், ஆசிரியைகளாகவும் கம்பெனிகளில் செகரட்டரிகளாகவும் பணிபுரிபவர்கள். ‘ஸ்வீட் சிக்ஸ் டீனைத்’ தாண்டி, ‘காரமான லேட் இருபதுகளுக்குள்’ காலூன்றியவர்கள். ஆனாலும் அருவிக்குள் நின்றபடியே ஆடவேண்டும் என்று மனதுக்குள் என்னமோ ஆசை. அதே சமயம், மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற தார்மீகப் பயம். ஆகையால், ஒவ்வொருத்தியும், உடம்பைத் தேய்த்துக் கொள்ளும் சாக்கில் ஆடிக்கொண்டாள். ஒரே ஒருத்தி மட்டும் “இந்த வயதில் ஆடாவிட்டால், இனிமேல் வரப்போவது கிழவியாட்டத்தான்” என்பதை வலுக்கட்டாயமாய் மனதுக்குள் கொண்டு வந்து, ஒரு ஆங்கிலப் பாடலைப் பாடி, பகிரங்கமாய் ஆடினாள். உடனே பல பெண்கள், தங்கள் மேலேயும், மற்றப் பெண்களின் முதுகுகள் மேலேயும் தாளம் போட்டார்கள். தப்பாட்டம்... தப்புத்தாளங்கள் தான் என்றாலும், அருவியாட்டத்தில் ஏற்பட்ட மனதின் ஆட்டம் உடலை ஆட்டி, உள்ளத்தையும் ஆட்டுவித்தது. மலையில் இருந்து இறங்கி, அந்தப் பெண்கள் வைத்திருந்த பைகளை ‘ஆய்வு’ செய்யப் போன குரங்குகள், அவர்கள் போட்ட