பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

நெருப்புத் தடயங்கள்

ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, வந்த காரியத்தைப் பற்றி யோசித்தன.

உடனே ஒருத்தி “ஆ... குரங்கு... ஏய்... நிர்மல்! டான்ஸ் ஆடுடி! அப்போதான் குரங்குக பயந்து ஓடும்” என்று சொல்லவும், நிர்மல், குரங்கு மாதிரியே அபிநயம் பிடித்தாள். பைகளில் மாற்றுப் புடவைகளை வைத்திருந்த பெண்களும், உடம்பில் இருந்த புடவைகளை உருவிப் போட்டுவிட்டு நின்ற பாவாடைக்காரிகளும், குரங்குகளைப் பார்த்து, பாயப் போவது போல் பாசாங்கு செய்தனர்.

எல்லோரும் குளித்து முடித்துவிட்டு, கூந்தல்களை உலர்த்தியபடி, வெளியே வந்து ஆடைகளை மாற்றிக் கொண்டார்கள். குகையில் கொலு கொண்ட கைலாச நாதர் லிங்கத்தைப் பார்த்து ஒப்புக்குக் கையை தூக்கிக் காட்டிவிட்டு, கீழே இறங்கினார்கள், தமிழரசியும், அவள் அறைத் தோழி பத்மாவும், வானுக்கும் பூமிக்கும் வள்ளலாய் விளங்கும் லிங்கத்தை, கரம் கூப்பி, மனம் விட்டு வணங்கினார்கள். கீழே இறங்கிய பெண் பட்டாளம் “தமிழு...மேடம்” என்றது. உடனே பத்மா “வா... போகலாம்”என்றாள். அந்தக் குகையருகே குடிசை போட்டு இருக்கலாமா என்பது போல் சிந்தித்த தமிழரசியை பலவந்தமாய் கடத்திக் கொண்டு சென்றாள்.

அருவியில் இருந்து கால் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தோப்புக்குள் இறங்கிய பெண் பட்டாளம், தமிழரசியும், பத்மாவும் போய்ச் சேருவதற்கு முன்பாக, பெட்ஷீட்டுகளை விரித்து, டிரான்ஸிஸ்டர் செட்டை தட்டி விட்டு, உணவுப் பொட்டலங்களைப் பிரித்துக் கொண்டிருந்தது. அங்கே பரிதாபகரமான மைனாரிட்டியாக இருந்த டீலக்ஸ் பஸ் டிரைவரும், கிளீனரும், ஹாஸ்டல் சிப்பாயும், பொட்டலங்களை வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். தமிழரசி, தன்னிடம் நீட்டப்பட்ட பார்சலை யந்திரம் போல் வாங்கி, அதைப் பிரிக்காமல்