பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

189

மனதைப் பிரித்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்த பத்மாதான், அதைப் பிரித்து அவள் மடியில் திணித்தாள்.

தமிழரசியோ, இதோ இந்த அருவி, தானும் தாமுவும் நீராடி விட்டு, இதே இந்த தோப்பில், இன்னும் சற்று மறைவான இடத்தில், கையோடு கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்து, நெஞ்சோடு கொண்டு வந்த காதல் மேலோங்க, ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதுபோல் மனதில் கற்பித்துக் கொண்டாள். பிறகு, “அய்யய்யோ ... காதல் ஜோர்ல லிங்கத்தை மறந்துட்டேன்” என்று உதட்டைக் கடித்தபடி, தானும், தாமுவும் லிங்கநாதர் முன்னால் கற்பூரம் ஏற்றி, '“மாசில் வீணையும், மாலை மதியமும், வீசுதென்றலும்” பாடுவது போல் பாவித்துக் கொண்டாள்.

திடீரென்று, “என்னடி, எல்லாரும் கை கழுவியாச்சுது. நீ இன்னும் தொட்டுக்கூடப் பார்க்கல...” என்ற அதட்டல் கேட்டு, லேசாய் கண்ணுயர்த்தினாள். பத்மா, அவள் வாயில் இரு இட்லித் துண்டை ‘விரலைக் கடிச் - சுடாதடி’ என்று சொல்லியபடியே வைத்தாள்.

தமிழரசி, தன்னையே தான் தின்பதுபோல் அதைத் தின்றாள். “ஒன் கண்ணில் உள்ள உத்திரத்தைக் கவனிக் காமல், பிறத்தியார் கண் துரும்பை கவனிக்காதே” என்று சொன்னது எவ்வளவு உண்மை! பொது நீதிக்காகப் போராடுகிறவள்னு எனக்குப் பேரு. ஆனால் இப்போ ... இப்போ மட்டுமில்ல, சென்னைக்கு வந்த பிறகு எப்பவுமே கலாவதி ஞாபகம் வர்ல; சித்தப்பாவைப் பத்திய சிந்தனையே இல்ல. அண்ணனைப் பற்றி அக்கறைப் படல. பெற்றோரைப் பத்தி நினைத்துப் பார்க்கல. எப்போதும், உண்ணும் போதும், உறங்கும் போதும், எண்ணும் போதும், எழுதும் போதும், எதற்காக தாமுவைப் பற்றி மட்டுமே நான் நினைக்கணும்...? நானா நினைக்கேன் ...? நான் நினைக்கல! ஏதோ ஒன்று அப்படி என்னை நினைக்க வைக்குது. அதற்குப்