பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

நெருப்புத் தடயங்கள்

பெயர் தான் காதலா? அப்படியானால்... காதல் விவஸ்தை கெட்டதா...? என்னுள் உயிரையும் தன்னுள் உடம்பையும் வைத்திருக்கும்— கலாவதியைவிட, இந்த தாமு எந்த வகையில் உசத்தி?’

தோளில் எடுத்து வைத்துச் சுமந்த சித்தப்பாவைவிட, என்தோளைத் தட்டி விட்டு, அப்புறம் அண்ணனின் அநியாய இழுப்புக்கு தலையைக் கொடுத்த இந்த சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா எந்த வகையில் உசத்தி? என் மனம் ஏன் அவரிலேயே உழல வேண்டும்? என்னிலும் ஏதோ ஒரு சுயநலம் இருக்கு. அதை அகற்ற முடியாட்டாலும் அடக்கணும். உறுதியென்ற அங்குசத்தால் ஒரேயடியாய் அடக்கணும்.

தமிழரசி, உணர்ச்சிகளைக் கடித்து உருக்குலைப்பவள் போல், உணவை பலங்கொண்ட மட்டும் பற்களால் குதறினாள். குதறியபடியே, காதல் உணர்வை உதற முயற்சித்தாள். ஊரிலிருந்து வந்து ஒரு மாதமாகிறது. அங்கே என்ன நடந்தது என்று அவளும் அறிய விரும்பவில்லை; எவரும் அறிவிக்கவும் இல்லை.

ஊருக்குப் போனவள், போனவளாய் திரும்பி வரவில்லை என்பதைப் புரிந்து கொண்ட அறைத் தோழி பத்மாவிடம் கூட, ஒரு வாரம் வரைக்கும், தனது இனிய—கொடுமையான அனுபவங்களைக் கூறவில்லை... அப்புறந்தான் அவளுடைய வற்புறுத்தலாலும், யாரிடமாவது சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற மனக் கட்டாயம் ஏற்பட்டதாலும், காதலை மட்டும் கொஞ்சம் ‘எடிட்’ செய்துவிட்டு, இதர விவகாரங்களை அப்படியே சொன்னாள். பிறகு, போகப்போக காதல் விவகாரத்தையும், உள்ளது உள்ளபடியாய் ஒப்பித்தாள். நல்ல வேளையாக, ‘ஸோஷியாலஜி’ (சமூக இயல்) உதவிப் பேராசிரியையான பத்மா அவள் மனோ நிலையைப் புரிந்து கொண்டு, அவளின்