பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

நெருப்புத் தடயங்கள்

நிற்கிறவங்க, இப்போ பின்னால கூட நிற்க மாட்டங்காங்க. ரூம்ல போர்வையை தலையோட சேர்த்து மூடி, பால்காரன் கூவுன பிறகும் தூங்குறாங்க, ‘ஓட் இஸ் திஸ்’ என்றவள், —பிறகு, டேலண்டும்... இளமை மாதிரி ஒரு நிலையில்லாத அம்சந்தானோ?” என்று. இன்னொருத்தியின் காதைக் கடித்தாள். உடனே, அந்த இன்னொருத்தி நான் மேடத்தை வழிக்குக் கொண்டு வாரேன் பாரு என்று” சொல்லிவிட்டு, தமிழரசியின் முன்னால் வந்து உட்கார்ந்தபடி தன் டேலண்டைக் காட்டினாள்:

“மேடம், நீங்க டி.வி.யில நமது விருந்தினரை இன்டர்வியூ செய்தது நல்லாவே இல்ல. பொதுவாய், நீங்க டி.வி, யிலே வந்தால் நேச்சுரலாய் இருக்கும். ‘அவர்களே.... அவர்களேன்னு’ செந்தமிழ்ல சிக்க மாட்டிங்க. நடமாடும் தமிழ்ல, ஏற்கனவே ‘கடம்’ போட்டு ஒப்பிக்காமல் ‘பிரஷ்ஷா’ கேட்பீங்க. பட், போன வாரம் ‘போர்’. நீங்களான்னு எனக்கே சந்தேகம். ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்கிற போர்டை, டி.வி.க் காரங்க ஒங்க கழுத்துல தொங்கப் போட்டிருக்கலாமுன்னு தோணிச்சுது.”

தமிழரசி, தன் முன்னாள் மாணவியைப் பலவீனமாய் பார்த்தாள். போன வாரம், டி.வி. நிகழ்ச்சிக்குப் போக மறுத்தாள். ஆனால் தயாரிப்பாளர் ‘ரிக்கார்டிங்...’ பிக்ஸாயிட்டு... நீங்க வருவீங்கன்னு... அந்த தமிழ் அறிஞர்கிட்டேயும் சொல்லிட்டேன் என்று சொன்னதும் அவளால் தட்ட முடியவில்லை....

முன்னாள் மாணவி விடவில்லை. அது போகட்டும். மேடம். நீங்க டாக்டரேட்டுக்கு, எதுக்காக ‘தமிழ் இலக்கியத்தில் வீரம் இல்லாமல் மார்தட்டியதால் ஏற்பட்ட விளைவுகள்னு’ சப்ஜெக்ட் எடுத்தீங்க? இதுக்கும், இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?”

தமிழரசி, தமிழரசியானாள்: