பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

193

இலக்கியம் என்கிறது கற்பனா வாதம் இல்ல. அது மக்களின் காலக்கண்ணாடின்னு ஒனக்குத் தெரிஞ்சிருந்தால், இப்படிக் கேட்டிருக்க மாட்டே. எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கோ இல்லியோ, என்னால நிரூபிக்க முடியும். கண்ணகியை போற்றிக்கிட்டே, பரத்தையரைப் பாடினோம். அமைதியை தேடிக்கிட்டே, மார்புக் காயத்தைப் பற்றியும், போரில் சாக சந்தர்ப்பம் இல்லாமல், இளமையில் செத்த குழந்தையின் மார்பை இரண்டாகப் பிளந்து புதைச்சதாய் கதைக்கிறோம். புறநானூறு வந்த பிறகும் அதைப் பாடிக்கிட்டே, யார்னு இன்னும் கண்டு பிடிக்க முடியாத ‘களப்பிரர்’ கிட்டே தோற்றோம். அந்தக் காலத்திலேயே தலைவிக்கு ஒரு கற்பு நிலை, தோழிக்கு ஒரு கற்பு நிலைன்னு வச்சோம். ஜனரஞ்சக பத்திரிகைகள்ல சங்கராச்சாரியார் படத்தையும், வாரியார் படத்தையும் சில்க் சுமிதா படத்தையும் ஒரே மாதிரி போடுறோம். அந்நிய கலாச்சாரத்தைப் புகுத்துறோம். இதை எதிர்த்து என்னால போராட முடியாட்டாலும், நம்ம யோக்கியதையை, பல்கலைக் கழக அறிஞர்களுக்காவது தெரியப் படுத்தலாமுன்னுதான் இந்த ‘டாபிக்கை’ எடுத்தேன். ஒனக்குப் புரியாட்டால், இனிமேல் ஒரு தடவை என் கிளாசுக்கு வா.”

கேள்வி கேட்டவள், குறும்பாய் சிரித்தாள்.

“புரியுது மேடம், புரியுது. அப்புறம் நான் எம். பில், எடுக்கலாமுன்னு நினைக்கேன். ‘அடித்தள மக்களும். இன்னாருடைய புதுக் கவிதையும்’ என்கிறது சப்ஜெக்ட். எந்தக் கவிஞரை எடுக்கலாம் மேடம்? மேத்தாவா, நா. காமராசனா, வைரமுத்தா, இல்ல வாலியோட பொய்க்கால் குதிரையைப் பிடிக்கட்டுமா?”

“நீ சொல்ற கவிஞர்கள் எல்லாம் நல்ல கவிஞர்கள். ஆனால் நீ இவங்க கவிதைகளை விட, இவங்களுக்கு சினிமா மோஸ்தர் இருக்கதால தான் கேட்கிறேன்னு நினைக்கேன்.

நொ -13